பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரம்போகியார்

129

சேண் நீங்கலும், பகை ஒழிதலும் வேண்டும் ; ஓதல் முதலாம் ஒழுக்கநெறி நிற்றல் வேண்டும் ; களவு முதலாம் கொடுமைகள் குன்றல் வேண்டும் ; நன்மை பெருகவேண்டும்; தீமை இலவாதல்வேண்டும்; அரசுமுறை செய்தல் வேண்டும் ; அவன்பால் போர்வெறி குன்றுதல்வேண்டும் ; ஆண்டுபல அவன் வாழவேண்டும். புலவர் கண்ட அரசியல் நெறி இது ; என்னே அவர் தம் அரசியல் அறிவு!

“நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க!”
“விளைக வயலே! வருக இரவலர்!”
“பால்பல ஊறுக பகடுபல சிறக்க!”
“பகைவர்புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!”
“பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!”
“வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!”
“அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!”
“அரசுமுறை செய்க! களவுஇல் லாகுக!”
“நன்றுபெரிது சிறக்க! தீதுஇல் லாகுக!”
“மாரி வாய்க்க! வளம்நனி சிறக்க!”

(ஐங் : ௧-௧௦)

ஓரம்போகியார், மக்களை மக்கட்டன்மையுடையராக்கும் மாண்புடையராவர் ; மக்களாய்ப் பிறந்தாரெல்லாரும் மக்களாகிவிடார்; மக்கட்குரிய மாண்புடைக்குணங்களை அவர் உடையராதல் வேண்டும்; அக்குணங்களைப் பெற்ற வழியே அவர் மக்களாக மதிக்கப்பெறுவர் ; “உறுப்பு ஒத்தல் மக்களொப்பு அன்றால் ; வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு” மக்கள் பெற்வேண்டிய மாண்புகள் பலப்பல ; இன்னாசெய்யாமை அவற்றுள் ஒன்று ; பிறர்க்கு இன்னாதன செய்வதில் இன்பங்காண்பதே உலகியல். அத்தகைய உலகில், ஒருவர். இன்னாதன செய்யாதிருத்தலே அரிது; என்றால், அவர், தமக்கு இன்னாதன செய்தார்க்கும், தாம் இன்னாதன செய்யாதிருத்தல் அரிதினும் அரிதாம் : அத்தகையார் மக்களிற் சிறந்த மாண்புடையராவர்.

அ.வீ—9