பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அதியன் விண்ணத்தனார்

காட்டும் வழிவகைகளையும் நோக்குக. நாடு நலம் பெற வேண்டுமாயினும், பெற்றுள்ள நலம் பலவும் இன்று நிலை பெறுதல் வேண்டுமாயினும், அந்நாட்டில் நல்லாட்சி நிலை பெறுதல் வேண்டும். ஆகவே, அரசன் முறைசெய்து காப்பாற்றும் மன்னவனாதல் வேண்டும் என விரும்பிய புலவர் “அரசு முறை செய்க” என்றும் வாழ்த்தியுள்ளார்.

நாடு வளம் பெற்று, வறுமையற்று விளங்குவதால், எம்மை எதிர்ப்பாரும் இலர்; யாம் எதிர்ப்பின் முன்னின்று தடுப்பாரும் இலர்; ஆகவே உலகில் எம் அரசு ஒன்றே வாழ்தல் வேண்டும்; எனை அரசுகள் ஒன்று அழிதல் வேண்டும்; இன்றேல் எமக்கு அடங்கி ஒடுங்குதல் வேண்டும் என்ற நாட்டாசை அரசற்கு உண்டாகிவிடுதலும் கூடும். அத்தகைய பேராசை கொண்டு எப்பொழுதும் போர், போர் எனப் போர் வெறிகொண்டு திரியும் அரசு, எத்தனை ஆற்றல் படைத்ததாயினும் இறுதியில் அழிந்தே போம்; ஆதலின், நாட்டு அரசர்பால் பகையுணர்ச்சி இல்லாமை வேண்டும் என்ற அறிவுடையராய், “வேந்து பகை தணிக” என்பதையும் விடாது அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு நாடு எத்துணை வளமும், வலிவும் உடையதாயினும், அந்நாட்டில் நிலையான அரசியல் அற்று, இன்று ஓர் அரசு, நாளை ஓர் அரசு என நாளுக்கோர் அரசு தோன்றும் நிலையற்ற அரசியல் உண்டாயின், அந்நாடு பெற்றுள வளத்தாலும் வலியாலும் பயன் இன்றாம்; அந்நாடு நாளடைவில், அவற்றை இழந்து அழிந்து போதல் உறுதி; ஆகவே, நாட்டில் நிலையான அரசு இன்று நிலை பெறுதல் வேண்டும் எனவுணர்ந்த புலவர், ஆளும் அரசன் ஆண்டு, பல பெற்று வாழ்வானாக எனவும் வாழ்த்தியுள்ளார்.

சுருங்கக்கூறின், மாரிவாய்த்தல் வேண்டும்; வளம் நனிசிறக்கவேண்டும்; வயல் விளைதல்வேண்டும்; நெற் பல பெருகவேண்டும்; பொன் பெரிது சிறக்கவேண்டும்; இரவலர் வாழவேண்டும். பால் பல ஊறுதல் வேண்டும்; பகடு பல சிறத்தல்வேண்டும்; பசியில்லாமையும், பிணி