பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௫. கடையத்தார் மகன் வெண்ணாகனார்

கடையம் என்பது தென்பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊர்; மேற்கடையம், கீழ்க்கடையம் என இக்காலத்தே வழங்கும் ஊர்கள் இடைக்காலத்தே, “கோனாட்டு விக்கிரம பாண்டிய நல்லூரான கடையம்” என்றும், “கோனாட்டுக் கடையம்” என்றும் வழங்கப்பெற்றுள்ளன; (A. R. NO. 522, 525 of 1916.) இக்கடையம், புலவர் பலர் தோன்றிய பெருமையுடையதாகும்; அவர்களுள் பலர், மதுரை சென்று குடியேறி வாழலாயினர். அவர்களுள் வெண்ணாகனாரும் ஒருவர்; இவர் இயற்றிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம்பெற்றுளது.

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்தேடிப் போயிருக்க, அப் பிரிவாலாம் துயர் பொறுக்கலாற்றாது வருந்திய தலைவியை, “ஆற்றியிருத்தல் அறன்” எனக் கூறித் தேற்றினாள் தோழி; அதுகேட்ட தலைமகள், “தோழி! முன்னொரு காலத்தே, ஊரில் திருவிழா நடைபெற, அதைக்காண நீ வற்புறுத்தினாய்; நாளும் நன்று; மறாது வருக! என வேண்டி நின்றாய்; நின்சொல் கேட்டு வந்தேன்; வந்ததன் பயன், ஆங்கு வந்திருந்த தலைவனைக் காண, அவன் தழலும், தட்டையும், தழையும் தந்தும், நயமொழி நல்கியும் நம்மை ஏமாற்றித், தாய், புறத்தே போகவிடாமல் காத்துப் பேணிய என் நலத்தினை நுகர்ந்து பிரிந்தானாக யான் வருந்தவேண்டியதாயிற்று; நின் சொல்லை ஒருகால் கேட்டதின் பயன் இது; மீண்டும் அறிவுரை கூற முன் வந்துள்ளனை; இன்னும் கேட்கின் யாது விளையுமோ?” என்று கூறி வெறுத்த உள்ளத்தளாயினள், இந்தக் காட்சியைக் கண்கவர, மனம் மகிழத் தீட்டித் தருகிறார் புலவர்.

“பேரூர் கொண்ட ஆர்கலி விழவின்
செல்வாம்; செல்வாம்; என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால்; தில்ல;
தழலும், தட்டையும், முறியும் தந்து, இவை
ஒத்தன நினக்குஎனப் பொய்த்தன கூறி
அன்னை ஓம்பிய ஆய்நலம்

என்னை கொண்டான், யாம் இன்னமால் இனியே.”
(குறுந் : ௨௨௩ )

அ. வி.—10