பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அதியன் விண்ணத்தனார்


உலகமக்கள் உளம் கொள்ளுமாறு ஒர் அரிய உபதேசம். அருள்கின்றார் புலவர்; இறைவனைப் பணியும் மக்கள் ஏனைய உயிர்கள் பால், அருளுடையராகவும், அன்புடையராகவும், அறவுள்ளமுடையராகவும் விளங்குதல் வேண்டும்; யார் ஒருவர், உயிர்கள்பால், அருள், அன்பு, அறம் காட்டுகின்றனரோ, அவர்களிடத்தேதான் இறைவன் அன்பு காட்டுவன் ; ஆகவே, இறைவன் தம்பால் அன்புகாட்ட வேண்டுவார், ஏனை உயிர்கள் மாட்டு, அன்புகாட்டப் பழகுதல்வேண்டும் ஆகவே இறைவனைப் பெறவேண்டுவார், அவனைப் பெறுதற்குரிய பெருநெறியாகிய, அன்பு, அருள், அறம் ஆய இவை தம்பால் என்றும் நீங்காமையினை அருளுமாறு அவனை வேண்டுதல் வேண்டும் ; அதற்கு, மாறாக அவன்பால், பொன்னும், போகமும் வேண்டல் அறியாமையாம் என்று கூறியுள்ளார்.

‘’யாஅம் இரப்பவை
பொருளும், பொன்னும், போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே.”
(பரிபாடல் : ௫: எ௮-அக)