பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகனார்

149

“பிரிந்தோர் வந்து நப்புணரப், புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ?
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று;
அம்ம வாழி தோழி!

யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே.” (நற் : ௭௬ )

சான்றோர் சான்றோர்பால் சென்று சேர்வதற்குப், பொன்னும், பவழமும், முத்தும், மணியும் அழகிய அணியாதற்பொருட்டு ஒன்று சேர்வதை உவமையாக்கிய புலவர்தாம் பாடிய நற்றிணைப் பாட்டில், ஈங்கையின் பெரிய மலர்கள், பாறைக்கண் உதிர்ந்து இடப்பது, மகளிர், தம் மனை முன்றிலின் மணலிடத்து ஆடற்கு இட்ட கழங்கு போலும் என உவமை கூறியிருப்பது, புலவர் தம், இயற்கையோடியைந்த அறிவுச் சிறப்பினைப் புலப்படுத்துவதாம்.

“சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ,
கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர்

மணலாடு கழங்கின் அறையிசைத் தரஅம்.” (நற் : ௭௬)

பரிபாடற் பாக்களுக்கு இசைவகுத்தோர் பெயர்களுள் கண்ணனார் என்ற ஒரு பெயரும் உளது: அப்பெயருடையாரும் இவரும் ஒருவரே எனக் கொள்வாரும் உளர்.