பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௨. கதக்கண்ணனார்

கதக்கண், சினம்மிக்க கண்; சிவனுடைய நெற்றிக் கண் சினக்கண் எனப்படும் ஆதலின், கதக்கண்ணன் என்பது சிவனுக்குரிய பெயர்களுள் ஒன்று! எனக் கொள்வர் சிலர்; ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த் தெறிந்த சினவாழி’ எனவருந் தொடரில், கதக்கண்ணன் என்ற சொல், திருமாலைக் குறிப்பதாலும், அவனுக்குக் கண்ணன் என்பதும் ஒரு பெயராம் ஆதலாலும், கதக்கண்ணன் என்பது திருமாலையே குறிக்கும் என்பர் மற்றும் சிலர்; அக்கடவுளர் ஒருவர் பெயரைத் தம்முடைய இயற்பெயராகக் கொண்டவர் நம் புலவர்.

தலைவன், இரவில், புலியும் களிறும் போர் செய்யும் காட்டுவழியே வரின் ஏதம் உண்டாதலும் கூடும்; அவனுக்கு ஆங்கு ஏதம் உண்டாயின், தாம் துயர் உறுவதோடு பழியும் கொள்ளவேண்டியவராவோம் என்ற எண்ணத்தால், அவன் இரவில் வருதலை விரும்புவாளல்லள் தலைமகள்; ஆனால், தலைவனோ, அவள்மாட்டுக்கொண்ட அன்பின் மிகுதியால், அக்காட்டுவழியின் கொடுமைக்கு அஞ்சாது வரத் துணிந்து விட்டான்; துணிந்துவந்தானைப் பழி எண்ணி ஏற்றுக் கொள்ளாது வறிதே மீளச்செய்தல் தம் தகுதிக்குத் தக்கதன்று என உணர்ந்த தோழி, தலைமகளிடம் ‘அவன் வரத்துணிந்துவிட்டான்; இனிப் பழிகண்டு நாணுவதால் பயனில்லை; எற்றுக்கொள்வதே செயற்பாலது.’ என உரைத்தாள். அவள் கூறுவதைக் கூறும் புலவர் செய்யுள் :

“ஒலிவெள் ளருவி, ஓங்குமலை நாடன்
சிறுகண், பெருங்களிறு, வயப்புலி தாக்கித்
தொன்முரண் சோரும் துன்னரும் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்;

வடுநா ணலமே; தோழீ! நாமே” (குறுந் : ௮௮)