பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௧. கண்ணனார்

கண்ணன் என்பது இவர் இயற்பெயர்; இவர் இயற்றிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது என்பதல்லது இவர் வரலாறு குறித்து வேறு எதையும் உணர்தற்கு இல்லை.

இரவுக்குறி இடையீடுபட்டு வருந்திய தலைவனைப் பிற்றைநாள் கண்ட தோழி, ‘ஐய! ஊரெல்லாம் உறங்கும் நள்ளிரவு என்பதையும் எண்ணாது வருகின்றனை நீ; அவ்வாறு வரும் நின் செயலை எதிர்நோக்கி உறங்காது கிடக்கின்றாள் இவளும்; ஆண்டுவந்து நீ, நின்வருகை அறிவிக்கச் செய்யும் சிற்றொலிகளும் அவள் காதில் விழுகின்றன. ஆயினும், அவளால் நின்னை வந்து காணல் இயலவில்லை. தாயோ, தன் மகள் நல்வாழ்வில் நாட்டமுடையளாய், இரவினும் அவள் அருகிலேயே உறங்குதலை மேற்கொள்கின்றனள். தலைவி, நின்குறி அறிந்து நின்னைக் காணத்துடிப்பதால் உடல் நடுங்கினாள். தாய் தன் மகள் அச்சத்தால் நடுங்குகிறாள் எனப் பிறழ உணர்ந்து மேலும் அவளை இறுக அணைத்துக் கொள்கின்றனள், இதனால் தலைவி, வலையில் அகப்பட்ட மயில்போல் வாடுகின்றனள்; ஆகவே களவொழுக்கத்தில் இனி அவளைக் காணல் அரிதினும் அரிதாம். ஆகவே, வரைந்துகோடலை விரைந்து மேற்கொள்வாயாக!” என வேண்டினாள் என்னும் துறையமைய வந்துள அச்செய்யுள் புலவர் தம் புலமைச் சிறப்பினைப் புலப்படுத்தி நிற்கிறது.

“பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவுக்களிறு போல்வந்து இரவுக் கதவம் முயறல்
கேளே மல்லேம்; கேட்டனம்; பெரும!
ஓரி முருங்கப், பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்குயாம்
உயங்குதொறும் முயங்கும் அறனில் யாயே.”

                                                               (குறுந்: ௨௪௪ )