பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணத்தனார்

155


மகளிர்க்குக் காவலாய் அமைய வேண்டுவது தம் அறிவினைத் தாம் விரும்பியாங்கு நிறுத்தவல்ல நிறைக் குணமே, அஃது இல்லாத வழி, அவர்க்கு எத்துணைப் பெருங் காவல் செய்யினும் அவர் நெறிகெடல் உறுதியாம். இந்த உண்மையினை ஒரு பெண் தன் தாய்க்கு உணர்த்தும் நிலையில் உணர்த்துகிறார் நம் புலவர்; ஒரு தாய் தன் மகள் புறத்தே போந்து விளையாடும் பேதைப் ப்ருவம் கழிந்தாளாதல் கண்டு, இல்லிடை வைத்துக் காப்பாற்றத் தொடங்கினாள். அவள் அன்னளாகவும், அவள் மகள் ஒரு தலைவனைக் கண்டு காதலித்து, அவனை இடைவிடாது கண்டு மகிழும் வாய்ப்பு இன்மையால் வாடினாள். தன் மகள் புறத்தே போகாதவள் ஆதலின், அவளுக்குக் காமநோய் உண்டாதற்கு வழி இல்லை என்ற துணிவினளாய், இது கடவுள் தந்த நோய் எனக்கொண்டு கவலையுற்று அது தீரத் தெய்வம் பேணத் தொடங்குகிறாள். 'பாம்பறியும் பாம்பின் கால்' என்ப; அவள் மகள் நோய்க்கு மனநோய்' காரணமாம் என்பதை உணர்ந்த அவள் தோழி, அத் தாயை அணுகி, நின் முயற்சியாற் பயன் உண்டர்காது; அவளை மீண்டும் புனங்காக்கப் போக்கின் அவள் துயர் போம் எனக்கூறி, உண்மையை உணர்த்தினாள்; இதை, அவள்_உணர்த்தும் அரிய திறத்தினை அழகாகப் பாடிக் காட்டுகிறார் புலவர் :

"இளமை தீர்ந்தனள் இவள், என வளமனை
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்திவள்
பசந்தனள் என்பது உணராய்; பன்னாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல்;......................
சிறுதினை வியன்புனம் காப்பின்

பெறுகுவள் மன்னோ என்தோழி தன்நலனே."

(நற் :௩௫௧)