பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௦. கண்ணத்தனார்

மதுரைப் புலவர்களுள் இவரும் ஒருவர். அகத்தில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றுமாக, இரு பாடல்கள் இவர் இயற்றியனவாக நமக்குக் கிடைத்துள. அந்திவானத்துச் செங்நிறமும், கடல் நீரின் கருநிறமும் கலந்து காணும்: மனதிற்கினிய மாலைக் காட்சிக்கு, இருபெரும் கடவுளராய சிவனும், திருமாலும், தம் செந்நிறமும், கருகிறமும் கலந்து தோன்றக் காட்சிதரும் சங்கரநாராயணக் காட்சியினை உவமை கூறிய திறம் வியந்து பாராட்டும் பண்பிற்றாம்.

‘’வெருவரு கடுங்திறல் இருபெரும் தெய்வத்து
உருவுடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடல்அணி கொளாஅ
வந்த மாலை." (அகம் :௩௪௦)

தலைவன் ஒருவனைத் தான் காட்டும் இரவுக்குறிக்கண் வந்து தலைமகளைக் காண்பாயாக எனக் கூறுவாள், அவன் வருகை பிறர் உணராவண்ணமாதல் வேண்டி, ஊரெல்லாம் உறங்கும் காலத்தே சிறு ஒலி உண்டாதலும் நன்றன்றாம். ஆகவே, நின் குதிரைகள், கனைப்பதாலோ அன்றி, காற் குளம்புகள் விரையப் பதிதலாலோ ஒலியுண்டாகாவாறு கவனித்துக்கொள்; நின் தேரையும் நெடுந்தூரத்திலேயே நிறுத்திவிடு; நீயும் விரைந்து வாராது, குன்றின் இழிந்து செல்லும் யானை மெல்லச் செல்வதேபோல், நின் அடியோசையுண்டாக்காவாறு மெல்லென இட்டு மணல் மேட்டினைத் தாண்டிவருக என்று கூறினாள் எனப் பாடிப் பெண்டிர்தம் விழிப்புணர்ச்சியினையும், தம் புலமைச் சிறப்பினையும் ஒருங்கே புலப்படுத்தியுள்ளார்: .

"பாணி பிழையா மாண்வினக் கலிமா
துஞ்சூர் யாமத்துத் தெவிட்டல் ஒம்பி
நெடுந்தேர் அகல நீக்கிப் பையெனக்
குன்றிழி களிற்றின் குவவுமணல் நீந்தி
இரவின் வம்மோ." (அகம் :௩௪௦)