பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௭. கவுணியன் பூதத்தனூர்

தமிழகத்தில், மிகப் பழைய காலத்திலேயே, ஆரியரும், அவர் பழக்கவழக்கங்களும் புகுந்துவிட்டமையினைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக உணரலாம்; அவ்வாறு வந்தாரும், தாம் வந்த இடத்தில் வழங்கிய மொழியறிந்து அதில் மூதறிவுடையராயினர்; தமிழ்ப்புலவர் பலர் அந்தணராவர் என்பதே இதற்குச் சான்றாம். அத்தகைய அந்தணப் புலவர்களுள் பூதத்தனாரும் ஒருவர்; இவர் பிறந்தது அந்தணருள், கௌணிய கோத்திரமாதலின், இவர் கவுணியன் பூதத்தனார் என அழைக்கப்பெற்றார்; தேவாரம் பாடிய நால்வருள் ஒருவராய ஞானசம்பந்தர் பிறந்ததும், இக்கவுணிய கோத்திரமே யாகும். முல்லைத்திணை தழுவி, அகநானூற்றில் இடம் பெற்றிருக்கும் செய்யுள் ஒன்றே, இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்துளது.

“தலைவி! கார்காலமும் தோன்றிவிட்டது; ஆகவே அவர் தம் வினைமுடித்துக்கொண்டு, உடன்வரும் இளையர் போற்ற வருவர்; வழியில், கலையோடு கூடிய பிணையினைப் பார்ப்பர்; அக்காட்சி நின்னை அவர்க்கு நினைப்பூட்ட அவர் மேலும் விரைந்து வருவர்; ஆகவே வருந்தற்க” என்று தோழி கூறக்கேட்ட தலைவி, “தோழி! நின் சொற்படி யானும் ஆற்றியிருக்கவே எண்ணுகின்றேன்; ஆனால், இம்மாலைக் காலமும், இக்காலத்தே ஆயர் ஊதும் குழல் ஓசையும் என்னை ஆற்றியிருக்கவிடாது அலைக்கழிக்கின்றவே! யான் என்செய்வேன்” என்று கூறினாள் எனப் பாடியுள்ளார் புலவர்.

“வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்ந்து
போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்த...
கருங்கோட்டு இரலை காமர் மடப்பிணை
மருண்ட மான் நோக்கம் காண்தொறும் நின்நினைந்து
தீண்தேர் வலவ! கடவு எனக் கடைஇ

இன்றே வருகுவர்.”  (அகம் : ௭௪)