பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௫௮. கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார்

கடையம் என்பது பாண்டி நாட்டகத்ததோர் ஊர். அவ்வூரினரான வெண்ணாகனார், தொண்டைநாட்டில், ஆத்திரையன் போன்ற புலவர் பெருமக்கள் பிறந்த பெருமை சால் ஊராகிய கள்ளில் புகுந்து வாழ்ந்தமையால், கள்ளில் கடையத்தன் வெண்ணாகனார் என வழங்கப்பெற்றார்; அவர் சென்று வாழ்ந்த கள்ளிலைச் சில நாட்களில் விட்டு மதுரை வந்து வாழலாயினமையால் மதுரைக் கள்ளிற்கடையத் தன் வெண்ணாகனார் என அழைக்கப்பெற்றார்.

சிற்றூர்த் தலைவராய்ச் சிறப்பெய்தி வாழ்த்த வீரர்கள், தம்மைப் பாடிவரும் பாணர் முதலாம் இரவலர்க்கு இல்லை என்னாது தம்மால் இயன்றன அளித்து மகிழ்வர்; அவ்வாறு அவர்க்கு அளிக்கத் தக்கன அற்றவழிப், பிறநாடுகள் மீது படையெடுத்துச் சென்று வென்று பெரும் பொருள் கொணர்ந்து கொடுப்பர். பழந்தமிழ் வீரர்களின் இப்பண்பை விளக்க விரும்பிய நம் புலவர், ஒரு வீரன் தன்பால் பொருள் அற்றகாலத்தே வந்த பாணனுக்குத் தன் வாளை ஈடுவைத்துப் பெற்ற பொருளை அளித்தான்; அந்நிலையில் தன் வறுமையுணர்ந்த அவன், அன்றே புறநாடு புகுந்து வென்று, கொடுத்தற்காம் பெரும் பொருள் கொணர்ந்து விட்டமையால் கவலையின்றிக் கள்ளுண்டு உறங்கினான் என அவன் ஆற்றலும் அன்பும் ஒருங்கே தோன்றப் பாடியுள்ளார்.

“நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே
அவன், எம் இறைவன்; யாம், அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்

இரும்புடைப் பழவாள் வைத்தனன்.” (புறம்: ௩௧௬)

தலைவன் பிரிந்தமையால் வருந்திய தலைமகளொருத்தி, அத்தலைவனோடு கலந்து இன்புற்ற காட்சியினைக் கண்டு நின்ற கானல், கழி, புன்னை, வண்டு, நண்டு ஆகியவற்றின்பால் சென்று, அவை தான், அவன் உற்ற காமநோயை