பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

அதியன் விண்ணத்தனார்

நீக்கித் துணைபுரிந்த நற்செயலையும், தன் துயர் தீர்த்த தலைமகளின் துயர்போக்கித் துணைபுரியா அத் தலைமகனின் நன்றி கெட்ட செயலையும், அத்தலைவன்பால் சென்று சொல்லாவோ என ஏங்குகிறாள்; அவற்றுள், கானலும், கழியும், நறுமலர்ப் புன்னையும் அவளும், அவனும் கலந்துறைந்த காட்சியினைக் கண்டனவேயெனினும், பிரிந்தவழி உண்டாம் துயரின் கொடுமையினை உணரவல்லன அல்ல ஆதலாலும், உணரினும் சென்று உரைக்கலாம் ஆற்றல் அற்றன ஆதலாலும், வண்டு, தனித்துறு துயரை உணரவல்லதேனும் அது மதுவுண்டு மதியிழந்து மயங்கிக் கிடப்பதால், அதனால் தூது செல்லுதல் இப்போது இயலாது ஆதலாலும், அவற்றை நம்பாது, பிரிந்தவழி உண்டாம் துயரை உணாவல்லதும், உணர்வோடு இருப்பதும் ஆய நண்டை நோக்கிக் சென்று தூதுரைத்து மீள்வாயா என வேண்டி நின்றாள்; அவள் வேண்டுகோளைப் புலவர்வாய்க் கேட்டறிக !

“கானலும் கழறாது; கழியும் கூறாது:
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது;
ஒருநின் னல்லது பிறிது யாதும் இவனே;
.........................................
தண் தாது ஊதிய வண்டினம்; களிசிறந்து
பறைஇய தளரும்; துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால்; அலவ! .......
நின்னுறு விழுமம் களைந்தோள்

தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே.” (அகம் : ௧௭௦)