பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மூவனார்

15

பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு வாழ்ந்து மீண்டு வந்த தன் கணவன்பால் “அன்ப! இப்பிறப்பு ஒழிய மறுபிறப்பு உற்றக்கால் நீரே என் கணவராதல் வேண்டும்; இப்பிறப்பில், நின் உள்ளம் விரும்பும் உயர்வினை வேறு ஒருத்தி பெற்றமை போலன்றி, வரும் பிறப்பில் அவ்வுயர்வினை உடையவள் யானே ஆகுக! இங்கிலை ஆக வேண்டுகின்றேன்,” எனக் கூறினாள் எனப் பாடிய புலவன் பெண்களின் உள்ளத்தை எத்துணை நுணுகி உணர்ந்திருத்தல் வேண்டும்!

“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர்என் கணவனை;
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.”

                                                           (குறுந் : ௪௯)

கணவன் பொருள் தேடிக் கொணரப் பிரிந்துபோய் விட்டான்; குறித்த காலம் வரவும், அவன் வந்திலன்; அவன் வாராமையால் மனைவி பெருந்துயர் உற்றாள்; அவள் துயரை ஓர் அளவு குறைக்கவேண்டி, அவள் தோழி எத்தனையோ ஆறுதல் உரைகளை அளித்தாள்; தோழி, பலப்பல கூறித் தேற்றுவதுகண்ட தலைவி, தோழியை நோக்கித் “தோழி! தலைவன் குறித்த காலத்து வாராமையால் என் தோள்களும் மெலிந்து அழகு குன்றின; அவன் வரும் வழியைப் பல்கரலும் நோக்கி நோக்கி என் கண்களும் காணும் ஆற்றலை இழந்துவிட்டன; நினைப்பு மிகுதியால் என் அறிவும் மயங்கிவிட்டது; உயிர் போவுழி, தன் உடலைப் பற்றிய நோயையும் உடன்கொண்டு போவதல்லது, அதை விட்டுச் சேறல் இல்லை ஆதலின், இறக்கும் நிலையில் உள்ள என்னைப் பற்றியுள்ள நோயும் என்னை விட்டு நீங்கிவிட்டது; பிரிந்தார்க்குத் துயர் தரும் மாலையும் வந்துவிட்டது; இனி என்நிலை என்னாம்? யான் இவ்வாறு கூறுவதுகண்டு, தோழி! யான் இறப்பைக்கண்டு அஞ்சுகின்றேன் என நினையற்க யான் சாக அஞ்சேன்; ஆனால், இறந்து மறுபிறப்புற்றால், அப் பிறப்பில், இப்பிறப்பின் என்னால் அன்பு செய்யப்பெற்ற என் தலைவனை மறந்து