பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மூவனார்

17

விடாது காத்தல் நின்கடன்,” என்று அறிவுரை கூறி அனுப்பினாள் ; என்னே அவள் அன்பு! என்னே அவள் அறிவு?

“தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு
அன்னா என்னும் குழவி போல,
இன்னா செயினும், இனிது தலை யளிப்பினும்
நின்வரைப் பினள்என் தோழி;
தள்னுறு விழுமம் களைஞரோ விலள்”

—(குறுந் : ௩௯௭)

இத்தகைய உயரிய தலைமக்களை ஒன்று கூட்டி நம்மூமுன் கொணர்ந்துகாட்டி, அறிவூட்டும் புலவர் அம்மூவனார்க்கு யாம் என்ன கைம்மாறு செய்யவல்லோம்?

பொருள் உடையார், பொருள் அளித்துப் புரந்தாலன்றி, இரந்துண்டு வாழ்வார் இறவாதிருத்தல் இயலாது என்பதறிந்த பொருள் உடையார், அவ்விரவல், தம்பால் ' பொருள் பெற்றுப் பிழைக்கும் புன்கண்மையுடையர் என அவரை இழிவுடையராகக் கருதாது, அவர்மாட்டுப் பேரன் புடையராதல் வேண்டும்; அதற்கு மாறாக அன்பு காட்டுவதை விடுத்து, வெறுத்தொதுக்குதல் விழுமிபோர் செயலாகாது; அடுத்துண்டு வாழ்கிறோமே; அண்டிப் பிழைக்கிறோமே என ஒடிந்த அவர் உள்ளத்தை, பொருள் அளிப்பார் வெறுப்பு, மேலும் வேதனைக்குள்ளாக்கும். இதை உணர்ந்த புலவர், தன்னையின்றி வாழாத் தனிநிலையுடையாள் தலைவி என்பதறிந்தும், அவளுக்குத் தலையளி செய்யாது தலைமறைந்து வாழும் தலைவன் செயல், தான் அளித்தாலல்லது வாழமாட்டார்மாட்டு அன்பின்மை காட்டும் அறக்கொடியோர் செயல்போலாம் எனக் கூறியுள்ளார் :

“நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின் நயனில ராகுதல் நன்றென உணர்ந்த
 குன்ற நாடன் தன்னினும், நன்றும்
நின்னிலை கொடிது,”

—(குறுந்: ௩௨௭)

அ. வி. —2