பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௮. ஆசிரியர் நல்லந்துவனார்

இவர் அந்துவன் எனவும், நல்லந்துவனார் எனவும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் எனவும் அழைக்கப் பெறுவார். இவர், நல் அந்துவன் எனவும், ஆசிரியர் அந்துவன் எனவும் அழைக்கப் பெறுதலால், இவர் அக்காலத்தாரால் நன்கு மதிக்கப்பட்டுளார் என்பது புலனாம். அதற்கேற்ப, மதுரைவாழ் புலவர்களுள் மிகப் பல பாடல் பாடிப் பெருமையுற்ற புலவர் மருதன் இளநாகனார், திருப்பரங்குன்றைப் பாராட்டுங்கால், அஃது அந்துவன் பாடிய அருமையுடையது என்று கூறி, இவரைப் பாராட்டியுள்ளமை உணர்க : “தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை.” (அகம் ; ௫௯)

சங்கமருவிய தொகை நூல்கள் எட்டனுள், “கற்றறிந்தார் ஏத்தும் கலி”, “கல்வி வலார் கண்ட கலி” எனப் போற்றப்படும் கலித்தொகையினைத் தொகுத்த சிறப்புடையார் நம் நல்லந்துவனார். “ஆதலான், ஈண்டுப் பாலைத்திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தாரென்று கூறுக” (கலி : தோற்றுவாய்) என்றும், “முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” என்புழிச் சொல்லாத முறையாற் சொல்லவும் படுமென்றலின், இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்” (கலி : உரை) என்றும் கூறும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரையான் இஃது உண்மையாதல் காண்க. அவ்வாறு தாம் கோத்த கலித்தொகைக்குரிய கடவுள் வாழ்த்தையும், ஐந்தாம் கலியாகிய நெய்தற்கலியினையும் இயற்றிய பெருமையும் இவர்க்கே உண்டு. இது, “சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை புல்லிய கிளவி எச்சமாகும்!” என்பதனாற் சொல்லெச்சமும், குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார்” என்ற நச்சினார்கினியர் நல்லுரை