பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

47

ஊழிக் காலத்தே உயிர்கள் ஒடுங்கிவிடும், “தொல்லூழித் தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால், பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கன் பெயர்ப்பான் போல்,” என்றும், கார்காலத்தே, நாழிகைக் கணக்கர், நாழிகை அறிவிக்கும் கன்னலான் அன்றி, வானத்துக்கோள் நிலையால் நாழிகை அறியலர்காவாறு வானம் மேகத்தால் மறைப்புண்டு தோன்றும், “குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது, கதிர்மருங் கறியாது அஞ்சுவரப் பாஅய்,” என்றும், மலையையும் மடுவையும் அழிக்கும் ஆற்றல் மழைக்கு உண்டு, “கடல் குறைப்படுத்த நீர், கல்குறை பட எறிந்து உடலேறு உருமினம் ஆர்ப்ப...........” என்றும், தம் எருது, தமக்குரிய உழவு முதலாம் தொழில்களைச் செய்யாது திரியக், காணப் பொறாது உழவர் உள்ளம், “எருது தொழில் செய்யாது ஓடவிடுங்கடன் வேளாளர்க் கின்று,” என்றும், நோய் போக்கும் மருந்தறிந்தான் ஒருவன், அம் மருந்தை அறியேன் என மறைத்தல் மாபாதகமாம், “வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன், மருந்து அறை கோடலின் கொடிதே” என்றும், ஊடுதல் காமத்திற்கின்பம் ஆயினும், அஃது அளவோடு அமைதல் வேண்டும்; அஃது உப்புப்போலும்; உப்பு மிகினும் குறையினும். அப் பொருள் ஒன்றிற்கும் உதவாதாதலைப்போன்றே, ஊடலும், குறையினும், மிகுந்தாலும் காதற்பெருமை குன்றும்; “துனி நனிகன்றிடின் காமம் - கெடூஉம்,” என்றும், காமத்திற்குக் கண்ணில்லை; கொடி, அருகுளது எட்டியே ஆயினும் பற்றிப் படர்வதேபோல், காமமும் கண்டார் எவரிடத்தும் உண்டாம்; அதற்குக் கட்டுப்பாடு விதித்தல் இயலாதாம், “கடவரை நிற்குமோ காமம்?” என்றும் கூறும் புலவர் பொன்னுரைகள் போற்றத் தக்கனவாம்.