பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬. ஆசிரியன் கோடங்கொற்றன்

மதுரை, தமிழ் வழங்கும் மாநகரா தலின், ஆண்டுத் தமிழறிவுறுக்கும் ஆசிரியர் பலர் வாழ்ந்திருந்தனர்; அத்தகைய ஆசிரியன் மாருள் கோடங் கொற்றனாரும் ஒருவர்; இவர் பெயர் சில ஏடுகளில் மதுரை நூலாசிரியன் கோடங்கொற்றன் எனவும் காணப்படுவதை நோக்கின், இவர் தனிப் பாடல்களையேயன்றி, பல பாக்களைக்கொண்ட நூல் பல ஆக்கியும் உள்ளார் என அறியலாம்; நுாலாசிரியர் என்ற பெயரும் உடையார் என்ற பெருமையினராய இவர் இயற்றிய பாட்டாக நமக்குக் கிடைத்தது குறுந்தொகைக் கண் வந்துள்ள, மகட் போக்கிய செவிலித்தாய் வருந்திய துறை தழுவிய பாட்டு ஒன்றே.

ஒரு பொருளை இழந்தவர், அப் பொருளைப் பெற்றிருந்த காலத்து, ஆப் பொருளோடு உறவு கொண்டிருந்த பிறபொருள் களையும், செயல்களையும் காணகேரின் கழிபெரும் வருத்தம் கொள்வர்; இஃது உள்ளத்தின் இயல்பு; இதை, உணர்ந்த ஆசிரியர், தன் மகள் தலைமகன் ஒருவனோடு உறவுகொண்டு ஊர்விட்டுப் போய்விட்டமை அறிந்து வருந்திய காலத்தே, தன் மகளோடு ஆடி மகிழும் அவள் தோழிப் பெண்கள், வழக்கம்போல் கழியில் மலர்ந்த மலர்களைப் பறித்தும், கடல்நீருட் புகுந்து ஆடியும் மகிழும் காட்சியினைக் கண்டு கழிபெரும் கலக்கமுடையளாயினள் எனப் பாடியுள்ளார்.

"கழிய காவி குற்றும், கடல
வெண்தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவில் ஆயம் உரியதொன்று அயர

இவ்வழிப் படுதலும் ஒல்லாள்." (குறுந்: க௪௪)