பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦. ஆசிரியன் பெருங்கண்ணன்

இவர் இயற்பெயர் பெருங்கண்ணன் என்பது; ஆசிரியன் என வரும் இச் சிறப்பு, இவர் புலமை நலத்தினைத் தெரிவிப்பதாம்; இனி ஆசிரியன் என்பது, அக்கால அந்தணர்க்கு வழங்கும் பெயராம்; ஆதலின் இவர் அந்தணராவர் எனக் கூறுவாரும் உளர். இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது.

பிளப்பையும் முழைகளையும் உடைய மலையெல்லாம் மணம் கமழுமாறு காந்தட்பூவின் தாதை ஊதும் வண்டு, பாம்பு உமிழும் மணிபோலத் தோன்றும் காட்சி நிறைந்த மலைநாட்டானாகிய நம் தலைவன், நம்மை விரைய வந்து வரைந்து கொள்ளாமையால், வளைகள் கழன்று உகுமாறு, என் தோள்களும் வாடின; அவரோடு கொண்ட உறவுகுறித்து ஊரார் எழுப்பும் அலர்உரை கேட்டும் உயிர் வாழ்கிற நம்பால், நாணமும் நில்லாது நீங்கிவிட்டது; ஆதலின் இனி அழிவதற்கு ஒன்றும் இல்லை எனக் கூறி வருந்தும் தலைமகள் கூற்று அடங்கிய,

"தொடி ஞெகிழ்ந்தனவே; தோள்சா யினவே;
விடுநாண் உண்டோ ? தோழி! விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள்
நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியிற் றோன்றும்

முந்தாழ் வேலிய மலைகிழ வோற்கே." (குறும் : உ௩௩)

என்ற செய்யுள், காந்தளை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்த தும்பியைப்போல், என் நலன் நுகர்ந்து எங்கும் அலர் எழச் செய்துவிட்டான்; காந்தளும், தும்பியும் பொருந்தி நிற்கும் அழகிய காட்சி, பாம்பும் மணியும் கலந்த அஞ்சத்தக்க காட்சியா தலைப்போல், இல்லறமாற்ற இனிய துணைவர்களாகக் கூடிய எம் இருவர் நட்பு, ஊரார் அலர் கூறத்தக்க அச்சம் நிறைந்த உறவரகித் தோன்றிவிட்டது என்ற கருத்தெலாம் தோன்றக் கூறினாள் எனப் பாடிய புலமை நலத்தைப் போற்றுவோமாக!.


அ.வி.-4