பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கசு. இளங்கண்ணிக் கெளசிகனார்

இளங்கண்ணி என்பது இவரது தந்தையார் பெயர். முடத்தாமக்கண்ணி, புல்லாளங்கண்ணி என்பனபோல் இளங்கண்ணி, என்பதும் அக்கால மக்கள் மேற்கொண்ட இயற் பெயர்களுள் ஒன்றுபோலும், கெளசிகன் என்பது ஒரு முனிவன் பெயர்: அப்பெயரையும், தமிழர்கள் அக்காலத்திலேயே தங்கள் இயற்பெயர்களுள் ஒன்றாக மேற்கொண்டிருந்தனர். இவர் பாடினவாக அகத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் ஆக இரு பாடல்கள் கிடைத்துள்ளன: இவர் எவரையும் பெயர்குறித்துப் பாராட்டினரல்லர்; ஆயினும், அகத்தில் வடுகரைப் பற்றியும், சேரரைப்பற்றியும் சிறப்பித்துக் கூறியுள்ளார்; வடுகர், வேங்கடம் சூழ்ந்த நாட்டினர்; வேட்டை நாய் தொடரச்சென்று, மாவையும், மாக்களையும் கொன்று மகிழ்ந்து வாழ்வர்; விற்போரில் வல்லவர்; தாம் போகும் இடங்களில் வேண்டும் உண்ணு நீரினைக் கன்றின் தோலால் ஆய கூட்டினுள் கொண்டு செல்லும் வழக்கம் உடையவர்; அத்தகையார், வழியில் ஆறலைத்துச் சினம் மாறி அமர்ந்திருந்த நிலையினேப் புலவர் குறித்துள்ளார்.

“கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர்
விற்சினம் தணிந்த வெருவரு கவலை.” (அகம் : ஙுஅக)

சேரர், தம்மைச் சினந்த பகைவர்தம் மிக்க வலியினை அழித்து வெற்றிகொள்ளும் வீறுசால் படையுடையவர்; தேனெழுகும் மணம் மிக்க மலர்மாலையினர்; அவர் படை கொண்டு புகுந்து அழித்த பகைவர் நாட்டு அரண்கள், மீண்டும் பயனுறாவாறு பெரும்பாழுறும் என்று சேரனொருவன் சிறப்பைப் புகழ்ந்து கூறியுள்ளார்.

“பொருந்தார்,
முனையரண் கடந்த வினைநவில் தானைத்
தேனியிர் நறுந்தார் வானவன் உடற்றிய
ஒன்னுத் தெவ்வர் மன்னெயில் போலப்
பெரும்பாழ கொண்ட.” (அகம் : ஙுஅக)