பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௬. இளநாகனார்

ஆண்டால் இளமையும், அறிவால் முதுமையும் உடைய நம் புலவர்க்குப் பெற்றோர் வைத்து வழங்கிய பெயர் நாகனார் என்பது. இவர் பாடிய பாக்கள் மூன்று நற்றிணைக்கண் இடம்பெற்றுள்ளன; குறிஞ்சிவளம் குறித்துப் பாடுதலில் புலவர் வல்லராவர்.

வெற்றியும் தோல்வியும் எங்கும், எப்பொழுதும் ஒரு நிலையே நிற்கும் இயல்புடையன அல்ல; மாறிமாறி வரும் மாண்புடையனவாம்; குறிஞ்சிநிலக் காடுகளின் காட்சியினைக் காட்டுவார்போல், இவ்வுண்மையினையும் ஒருவாறு உணர்த்தியுள்ளார் புலவர். எதிர்த்த புலியைக் குத்திக் கொன்று அதனால் கறைப்பட்ட தன் கோடுகளை, மலையருவி நீரில் மண்ணும் யானையைக் காட்டும் அவரே, இரை வேட்டெழுந்த புலியாற் கொல்லப்பெற்ற யானையின் பரு வுடலை, ஆளிநன்மான் ஈர்த்துச் செல்லும் காட்சியினையும் காட்டுவது காண்க.

"கொல்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச்
செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை
கன்மிசை அருவியில் கழு உம் சாரல்"
'ஆளி நன்மான் வேட்டுஎழு கோள் உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி

ஏந்துவெண் கோட்டு வயக்களிறு இழுக்கும்.”

(நற் : க௫க, உ௦௫)


தமிழகத்துக் காடுகள் ஈண்டுக் காட்டியனபோலும் கொடிய காட்சிகளோடு, அழகிய காட்சிகள் பலவற்றையும் ஆங்காங்கே கொண்டிருந்தன என்பதையும் புலவர் பாக்கள் உணர்த்துகின்றன; மந்தியொன்று, தன் மனம் விரும்பும் கடுவனோடு கலந்து மகிழ்ந்தது; அம் மகிழ்ச்சியால் தன்னை மறந்திருந்த மந்தி, தன் உணர்வு வரப்பெற்றதும், தன்னைச்சூழத் தன் இனக்குரங்குகள் இருப்பதை