பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அதியன் விண்ணத்தனார்

உணர்ந்தது. நாணம் நனிமிகக் கொண்டது; தான் கடுவனோடு கொண்ட காதல் வாழ்க்கையினை அவை கண்டு விட்டனவோ என அஞ்சிற்று; உடனே, நீர்நிலை அருகே. நீண்டு தழைத்திருந்த நெடிய வேங்கைமேல் ஏறி, நீரைத் தொடுமாறு தாழ்ந்திருந்த அதன் சினையொன்றில் அமர்ந்தது. கீழே, ஆடாது அசையாது ஆடிபோல் தெளிந்து நிற்கும் நீரில் தன் முகத்தினை நோக்கிக்கொண்டே, தான் கடுவனோடு கலந்தக்கால் கலைந்துபோன தன் தலைமயிரைத் தன் இனம் அறியாவாது தன் கைகளால் கோதிமுடித்தது. மந்தியின் நாணம்கொள் நல்வாழ்க்கையினை நன்கு விளக்கும் இக்காட்சியினைப் புலவர் படம்பிடித்துப் பாராட்டி மகிழ்கிறார்.


"கடுவன்
முறியார் பெருங்கிளே அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்தில் களவினிற் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி, கருங்கால்
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினே செலீஇயர்,
குண்டுநீர் நெடுஞ்சினை நோக்கிக் கவிழ்ந்துதன்

புன் தலைப் பாறுமயிர் திருத்தும்.”

(நற் : க௫க)


கணவனும் மனைவியுமாகிக் காதல் வாழ்வு மேற்கொள் ஆளும் பண்டைத் தமிழ்மக்கள், அறிவு, உரு, திருவானேயன்றி, உணர்வானும் ஒத்த உயர்வுடையராவர்; கணவன், மனைவியின் இன்ப துன்பங்களைத் தன் இன்ப துன்பங்களாகக் கருதுவன்; மனைவியும், கணவன் இன்ப துன்பம், தன் இன்ப துன்பமாகக் கொள்வள் காதலர் தம் கவின் மிகு இவ்வாழ்வினைப் புலவர் வரைந்து காட்டி வியந்து போற்றுகிறார்.

தலைவன் வந்து தலையளி செய்வதால், தன் இன்னல் குறைய, இன்பம் மிகுமாயினும், அவன் வரும் வழி, ஏதம் நிறைந்தது என்பதை அறிந்தவளாதலின், அவன் வாராமையால், தன் நுதல் பசப்பூரவும், தோள் மெலியவும் தான் விருந்தினும் வருந்துக! அவன் அவ்வழி வாராதிருத்