பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளம்பால் ஆசிரியன் சேந்தன் கூத்தனார்

71

இசை, இரும்புநிகர் நெஞ்சுடையாரையும், இரக்க உள்ளத்தவராக்கும் என்று கூறுப, இசைக்கு உருகாத உயிரே உலகத்தில் இல்லை; ஆறறிவு கொண்ட மக்களே அல்லாமல், புல்லும், மரமும் கூட இசைக்கு உருகும்; தமிழ்முனிவன் யாழ் இசைக்குக் கல்லும் உருகிற்று எனக் கதை கூறுவர். சீறி எழும் பாம்பும், இசைகேட்டவழிச் சினம் ஒழிந்து ஆடும்; இசை கேட்ட வழி ஆறலை கள்வர் கைப்படைகளும் தாமே நழுவும். இசையின் சிறப்புக்குறித்துத் தமிழ் நூல்கள் அறிவிப்பன இவை ; விலங்குகளில் இசைக்கு எளிதில் வயமாகும் விலங்கு யானை; இசைக்கு உருகிய யானை ஒன்றின் இயல்பினைப் புலவர் கூத்தனார் நன்கு எடுத்துக் கூறியுள்ளார்.

ஒரு தினைப்புனம்; அப்புனத்தைக் காப்பார் இருத்தற் பொருட்டு அமைந்த மிக உயர்ந்த பரண்; புனம் காவல் . கருதிவந்த கானவன், கள்ளுண்ட மயக்கத்தால் பரண்மீதே கண்ணயர்ந்துவிட்டான்; அவன் அசைவு அறிந்து வந்தது ஆங்கோர் ஆண் யானை; தன் பசிபோக வேண்டும் மட்டும் தினையுண்ணத் தொடங்கிற்று; அந்நிலையில், அக்கானவன் மனைவி, தன் கூந்தல் காற்றில் புலருமாறு, அதனுள் தன் கைவிரல் விட்டுக் கோதிக்கொண்டே குறிஞ்சிப் பண்ணை வாய்விட்டுப் பாடலாயினள்; அப்பண் வந்து புகுந்தது அவ் யானையின் காதினுள்; உடனே யானை, தன் அறிவு மயங்கிற்று; பசியை மறந்தது; தினை உண்பதை ஒழிந்தது; பசியால் உறக்கங்கொள்ளாத யானை ஆண்டே பெருந்துயில் மேற்கொண்டு விட்டது.


ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென,
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக், கைபெயரா
ஒலியல் வரர் மயிர் உளரினள் கொடிச்சிம
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும்.” (அகம் : ௧௦௨)