பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௧. இளம்பூதனார்

தமிழர் தம்மக்கட்கு இட்டு வழங்கிய தெய்வப் பெயர்களுள் பூதன் என்பதும் ஒன்று; பூதன், இளம்பூதன், பெரும் பூதன் என்ற பெயர்களை அவர்கள் பயில மேற்கொண்டிருந்தனர். இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது.

பெண்டிற்குத் தாயினும் சிறந்தது நாண், உயிரினும் சிறந்தது நாண் என்றெல்லாம் கூறுவர்; அதனால், “நாணால் உயிரைத் துறப்பர்; உயிர்ப்பொருட்டால் நாண் துறவார் நாண் ஆள்பவர்” என்றார் திருவள்ளுவர்; மகளிர்க்கு, நாணினும் செயிர் தீர் கற்பே சிறந்ததாம் ஆதலின், அவர் தம் கற்பினைக் காத்தற் பொருட்டு நாணல்லன செய்து நாணைத் துறக்கவும் துணிவர்: நாணைத்துறந்தும் கற்பு நிலையாதாயின், தம் கற்பினைக் காத்தற்பொருட்டு உயிரையும் துறப்பர், தலைவன் ஒருவன் வரையாது ஒழுகுவதால், ஊரார் கூறும் அலர் உரையால் தன் நாணை இழந்தும், தன் கற்பினைக் காத்தற் பொருட்டு உயிர்வைத்திருந்தாள் ஒரு தலைவி ; அந்நிலையிலும் அவளை வரைந்துகொள்ளாது, பொருள் தேடிப் பறநாடு செல்ல எண்ணினான் அவன் : அதைத் தோழி அவளுக்கு அறிவித்தாள்; அதற்கு அவள், “அவர் வரையாது காலங்கடப்பதால், என்பால் உள்ள, நலன், நாண் எல்லாம் ஒழிய, உயிர் ஒன்றே எஞ்சியுளது; அவர் வரைய வருவார் என்ற எண்ணத்தால், நாணை இழந்தும் உயிர்கொண்டு வாழ்கிறேன்; இந்நிலையில் அவர் பிரிந்துசெல்லக் கருதுகிறார் எனின், நம்மால் இழக்கக் கூடியது வேறொன்றும் இல்லை; உயிர் ஒன்றே உளது; அதை இழப்பதல்லது நாம் வேறு யாது செய்ய வல்லோம்” எனக் கூறி வருந்தினாள் எனப் பாடிய பாட்டில் புலவர் உள்ளத்தைக் காண்க!


“விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்
இன்உயி ரல்லது. பிறிதொன்று

எவனோ தோழி! நாம் இழப்பதுவே?” (குறுந் : ௩௩௪.)