பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அதியன் விண்ணத்தனார்

காக்கவேண்டுவனவற்றைப் பேணிக் காக்கும் இயல்புடையராய பெரியார்களின் பண்புடையனவன் என எண்ணிய எண்ணத்திற்கு மாறாக, விரும்பிக் காக்கவேண்டிய நின்னை விரும்பாது ஒழுகுதல் எனக்கே வெட்கமுண்டாகிறது; இதற்கு என்செய்வது?" என்று வினவி நின்றாள். இவ்வாறு, வரையாது வந்தொழுகும் அவ் ஆண்மகன், தங்கள் வீட்டிற்குப் புறத்தே தாம் கூறுவனவற்றைக் கேட்கக் கூடிய அணித்தாயவிடத்தே வந்து நின்றபோது கூறினாள். கேட்ட அவன் தலைவியின் துயர்நிலை அறிந்து விரைந்து வந்து வரைந்து கொள்வானுக என்ற வேட்கையால் எனப் பாடியுள்ளார்; இதில், பெரியோராவார், போற்றிக் காக்க வேண்டிய பொருளைப் போற்றிக் காக்கக் கடமைப்பட்டவர்;. அக்கடமையிற் றவறுவார் பெரியராகார் எனவும், ஒருவரோடு நட்பு மேற்கொள்ளுங்கால், ஓருயிரும் ஈருடலும் போலும் உளம் ஒன்றிய நட்புக்கொளல் வேண்டும்; அவ்வாறு கொண்ட நட்பினருள் ஒருவருக்குற்றன மற்றவர்க்குற்றன. ஆம் ஆதலின், ஒருவர் அறிந்ததை மற்றவர்க்கு மறைத்தல் மாண்புடைமையன்று எனவும் கூறிய பொருளுரைகளைப் பொன்னினும் போற்றுவோமாக!

"பேணுப பேணார் பெரியோர், என்பது
நாணுத்தக் கன்றது காணுங் காலை;
உயிரோர் அன்ன செயிர்தீர் நட்பின்
நினக்குயான் மறைத்தல் யாவது, மிகப்பெரிது
அழிதக் கன்றால் தானே; கொண்கன்
யான் யாய் அஞ்சுவல் எனினும் தானே
பிரிதல் சூழான் மன்னே; இனியே
காணல் ஆயம் அறியினும், ஆனாது
அலர்வ தன்றுகொல் என்னும்; அதனால்
புலர்வது கொல்அவன் நட்பு? எனா
அஞ்சுவல் தோழி!என் நெஞ்சத் தானே.”
(நற்றிணை : எஉ)

.

எத்துணை அரிய கருத்துக்கள் ! எவ்வளவு எளிதாக எடுத்துக் கூறியுள்ளார்! என்னே அவர் புலமை!