பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௩. இளவெயினனார்

வேட்டுவர், எயினன் எனும் பெயருடையராதல் பெரு வழக்காம் ஆதலின், இவர், அவ்வேட்டுவர் வழிவந்தவராவர் என்று அறிக. பரிபாடற் புலவர் வரிசையுள், கடுவன் இளவெயினன் என்பார் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்; அவர் வேறு; இவர் வேறு. நற்றிணைக்கண் காணப்படும் செய்யுள் ஒன்றே, இவர் பாட்டாக இப்போது கிடைத்துளது.

தலைவன் விரைந்து வந்து வரைந்து கொள்ளாமையால், பெரிதும் வருந்தினாள் தலைவி, பிறைபோலும் பெருவனப்புடைய அவள் நுதலும் அழகிழந்துவிட்டது; அவள் உடல் மெலிந்துவிட்டமையால், அவள் கைவளைகளும் கழன்று விழலாயின; அவள்பால் உண்டான மாறுதல்களை உணர்ந்த ஊராரும் அவளைப், பலர் அறியப், பழிகூறலாயினர்; இந்நிலையிலும், அவள் தன் துயரைத் தலைவன் பால் வாய்விட்டுக் கூறினாளல்லள்; கூறுதல் மகளிர்க்கு முறையன்று என, நாணம் அவளை முன்னின்று தடுத்து விட்டது. ஆனால், அவள் கண்கள் மட்டும், அவள் கட்டிற்கு அடங்காது, கண்ணீர் சொரிந்து, அவள் உள்ளத்து உறுதுயரை அவனுக்கு உணர்த்தத் தொடங்கிவிட்டது. இதைக்கூறி, அவள் பெண்மை நலத்தைப் பாராட்டினாள் அவள் தோழி. அவளைப் பாராட்டிய தோழி, அவள் அவ்வாறு வருந்தவும், அவளை மணந்து, அவள் துயர் போக்க எண்ணாது வாளா வந்து போகும் அத்தலைமகனைப் பழிக்கவும் செய்தனள்; பழிப்பாள். அவன்முன் சென்று அவன் தவற்றினைத் தெளிய எடுத்துக் கூறித் திருத்துதல், தனக்கு மரபன்று என்று கருதி, அவன் ஒருநாள் தங்கள் மனையருகே வந்திருந்த காலம் அறிந்து, அவன் கேட்குமாறு, அவளைப் பாராட்டும் பாராட்டிற்கிடையே, அவன், இரைவேண்டிய பெண்நாரை, கடுஞ்சூல் கொண்டிருந்தமையால், பறந்து சென்று பெறமாட்டாது வருந்தியிருந்ததாக, ஆண் நாரை, அது விரும்புமாறு, கடற்கரை புக்குக்-