பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அதியன் விண்ணத்தனார்


கடல்மீன் கொணர்ந்து கொடுத்து மகிழ்விக்கும் அழகிய நாட்டிற்குரியவன் என, அவனைப் பாராட்டுவாள் போல் தன்னாட்டுப் பறவை, தன் மனைவியின் துயர் போக்கி வாழ்தலைக் கண்டும், இவன் அவ்வறிவினைத் தான் கொள்ளாதது ஏனோ ? எனப் பழித்துரைத்தாள்.

பெண் நாரை கழனியிலே கிடக்க, ஆண் நாரை, கடற்கரைக்கன் மீன்தேடி உழல்வதால், ஆண்டும் அவை பிரிந்தே வாழ்கின்றன எனினும், அப்பிரிவு, தன் பசிபோக்கப் பயன் உறுதல் அறிந்த பெண்நாரை, அப்பிரிவினை விரும்பி ஏற்றுக் கொள்ளும்; அதைப் போலவே, தலைவன் பிரிந்துறைதலை இன்று பொறாத தலைவி, அவன், என்றுமே தன்னைப்பிரியாதிருத்தல் வேண்டும் என விரும்புவாளல்லள், தன்னை மணந்து, தன் இல்லறம் இனிது நடத்தற்காம் பொருள் வேண்டிப் பிரியின், அப்பிரிவு, தன் இல்லற வாழ்விற்கு இன்றியமையாததாதல் அறிந்து, அதை விரும்பி ஏற்று, ஆற்றியிருப்பள் என்றும் அறிவித்தாள்.

அறம் உரைத்து அறிவூட்டும் தோழியின் கூற்றினைப் பாட்டில் அமைத்துப் பாடித் தம் புலமையினைக் காட்டிப் புகழ் பெற்றுள்ளார் புலவர்.

'பிறைவனப்பு இழந்த நுதலும், யாழநின்
இறைவரை நில்லா வளையும், மறையாது
ஊரலர் தூற்றும் கெளவையும் நாணிட்டு
உரைஅவற்கு உரையா மாயினும், இரைவேட்டுக்
கடுஞ்சூல் வயவொடு கானல் எய்தாது
கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு
முடமுதிர் காரை கடல்மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டுநிலை செல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைமிக்கு
உரைத்ததோழி உண்கண் நீரே." (நற் உ௬௩)