பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறையனார்

79

அறிந்தவன் நீ; எனக்குத் தந்தையும் நீ; தாயும் நீ; என் மனத்துயர் மாற்றுவதற்கு ஏற்றதொரு சமயம் இது; அரசன் உள்ளக் கருத்தினைத் தெள்ளிதின் உணர்த்தும் செய்யுளொன்று தருக” என் இருகை கூப்பி இரந்து வேண்டினன்.

தருமியின் வேண்டுகோட்கிரங்கிய தம்பிரான், “கொங்குதேர் வாழ்க்கை” என்ற இச்செய்யுளை இயற்றித் தந்தருளினன். பெற்ற தருமி பெருமகிழ்வுற்று அதனைக் கொண்டுபோய்ப் புலவர்களிடத்தே கொடுத்தனன்; புலவர்கள், பாட்டு, சொல்வளமும், பொருள்வளமும் செறியத் தோன்றும் பொலிவினைக் கண்டு “நன்று நன்று!” என வியந்து பாராட்டினர்; மன்னன் தன் சிந்தையுறு ஐயம் அறிந்துபாடப் பெற்றுள்ளமை அறிந்து உவந்தான்; “தருமி கிழி பெறுக!” எனப் பணித்தான்; தருமி, சங்க மண்டபம் புகுந்து கிழி அறுக்கத் துணிந்தான்; ஆனால், அந்தோ ! அந்நிலையில் ஆண்டுப் போந்த நக்கீரர், “பாட்டு, பிழையுடைத்து! பொற்கிழி தீண்டற்க!” எனக் கூறிப் போக்கினர்.

வேதியன் வருந்தினான்; கோயிலுட் புகுந்து இறைவன்முன் நடந்தன கூறி முறையிட்டான்; உடனே கோயிற்குடி கொண்ட பெருமான் ஒரு புலவனாய்த் தோன்றி வெளிப்பட்டுச் சங்கத்தை அடைந்து “என் பாட்டில் பிழை கண்டவன் யாவன்?” என வினவி நின்றார். நக்கீரர் “குற்றம் கண்டவன் யானே” என்றார்; இறைவன் “கூறிய குற்றம் யாது?” என்று வினவ, “செய்யுள் சொற்குற்றம் உடைத்தன்று; பொருட்குற்றம் உடைத்து; கூந்தல் மணம் பெறுவது மலர்களால்; இயற்கை மணம் அற்றது; அற்றாக, ‘அரிவை கூந்தலின் நறியவும் உளவோ?’ என்ற இப்பாட்டு கூந்தற்கு மணம் இயற்கை என் இயம்புகிறது; இதுவே குற்றம்” என்றார். இறைவன், “பத்தினிப்பெண்டிர் கூந்தற்கும், மணம் செயற்கையால் உண்டாவது தானே?” - என நக்கீரர் “ஆம்” என்றார்; “அரமகளிர் கூந்தலும் அற்றோ?” என, நக்கீரர் “அதுவும் ஆற்றே” என்றார்; இறுதி-