பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈழத்துப்பூதன் தேவனார்

83

ராதற்குத் தகுதியிலராவர்; அவர், அப்பண்பு தம்பால் நீங்காது நிற்க வேண்டுவரேல், ஒரு சிறிது நேரமும் ஓயாது உழைத்தல் வேண்டும். அவ்வாறின்றி உறங்கிக் கிடப்பார் பால் அப்பண்பு நில்லாது நீங்கும்; ஆதலின், நாணமும், நற்புகழும் வேண்டுவார், நாள்தோறும் உழைத்து உயர்வடைய எண்ணும் எண்ணமுடையராதல் வேண்டும்; நாடாள் தலைவர்பால் இருக்கவேண்டிய இப்பண்புகளைப் புலவர் ஈழத்துப்பூதன் தேவனார் நன்கு எடுத்துக் காட்டுகிறார்:

“செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்
குறுமிடத் துய்க்கும் உதவி ஆண்மையும்,
இல்லிருந்து அமைவோர்க் கில்லென் றெண்ண
நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்.” (அகம்: ௨௩௧)

தலைவன் பிரியத் தனித்திருந்து, வாடைக் காற்றால் வாடும் தலைமகள் ஒருத்தி, வேல்போல் தோன்றும் கரும்பின் வெள்ளிய அரும்புகள் பூக்குமாறு அவற்றை அசைத்தும், அறிவாற் சிறந்த தூக்கணங்குருவிகள் அரும்பாடுபட்டு அமைத்த கூடுகள், அவை கட்டப்பெற்ற மூங்கிலோடு ஆடுமாறு ஆட்டியும் கொடுமை செய்யும் வாடை என அவ்வாடையின் இயல்பினைக் கூறி, இவ்வாடை வருத்துமே என்ற எண்ணமற்றுப் பிரிந்தார், உண்மையில் அறி வற்றவரே எனக் கூறி வருந்தினாள் எனப் பாடிய பாட்டு படித்து இன்புறற்பாலதாம்.

“கரும்பின்
வேல்போல் வெண்முகை விரியத் தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை
மூங்கில் அங்கழை தூங்க ஒற்றும்
வடபுல வாடைக்குப் பிரிவோர்
மடவர்; வாழியிவ் வுலகத் தானே” (நற்: ௩௬௬.)

தினையைத் திருடித் தின்னச் செல்லும் பன்றி, பல்லியின் நற்சொல் கேட்டுச் செல்லும் எனவும், அவ்வாறு செல்லவும், அதன் வருகையறிந்த கானவன் கொள்ளி