பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார் வரலாறு

43

தமிழ்ச் செய்யுட்கண் செறிந்து கிடக்கும் உவமைகளின் எண்ணிக்கையினையும், அவற்றின் உயர்வையும் உணர நேரின் வியப்பால் உணர்வற்றுப் போவர் என்பது உறுதி. பழந்தமிழ்ப் பாடல்களுள் பொதிந்து கிடக்கும் அவ்வுவமைகளுள், ஒளவையார் எடுத்தாண்ட உவமைகள் சில வற்றை ஈண்டுத் தருகின்றேன்.

"பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல."

(புறம்:௯௧)

ஒளவையார் ஆண்ட உவமைகளில் இஃதொன்று; அதிய மான் அரிதின் முயன்று பெற்றான் நெல்லிக்கனி ஒன்றை; அக் கனியுண்டார் கோயின்றி நெடிதுநாள் வாழ்வர் என்ப; அதியமான், அதைத் தான் உண்டு நெடிதுநாள் வாழ்வதினும், ஒளவையார் உண்டு நெடிதுநாள் வாழ்வராயின் அதனால் உலகிற்குப் பெரும் பயனாம் என உணர்ந்தான்; அக் கனியை ஒளவையார்க்குக் கொடுக்கத் துணிந்த அவன், அக் கணியின் இயல்பறியின், ஒளவையார் அதைத் தாம் உண்ணுது இரவலர் புரவலனாய அவன் உண்ணவே வற்புறுத்துவர் என அறிந்தானாகவே, அக் கனியின் இயல்பை அவர்க்கு முன்னர் அறிவியாது, அவர் உண்ட பின்னர் உணர்த்துவானாயினன்; அதியமானின் இச்செயல், ஒளவையார் உள்ளத்தே, அளவிலா மகிழ்வெழச் செய்தது. எவரும் முதற்கண் தாம் வாழவே விரும்புவர்; தாம் வாழ்ந்த பின்னரே, பிறர் நல்வாழ்வு குறித்துக் கவலை கொள்வர். இதுவே உலகியல்; ஆனால், அதியமான் செயல் உலகியற் போக்கையே மாற்றிவிட்டது கண்டார்: தன் வாழ்வு பற்றிக் கவலை கொள்ளாது, பிறர் நல்வாழ்வில் நாட்டம் கொண்ட அதியமான் செயல், சிவபெருமான் செயல் ஒன்றை நினைவூட்டுவதாயிற்று.

சாவா மருந்தாகிய அமிழ்தினைப் பெறத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த காலத்தில், முதற்கண் அதில், அமிழ்தத்திற்குப் பதிலாக, ஆலகாலப் பெருநஞ்சு தோன்றிற்று அது கண்டு அஞ்சினர் அனைவரும் சிவன், அவர்