பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஒளவையார்

களுக்கு நேர இருந்த கேட்டைப் போக்க, அவ்வாலகால நஞ்சைத் தான் உண்டு, சாவா மருந்தாகிய அமிழ்தை அவர்களுக்கு அளித்தான்; அதனாலேயே, நஞ்சுண்ட நீலகண்டன் என்பதும் அவனுக்குப் பெயராயிற்று இவ்வாறு கேட்டினைத் தான் தாங்கிக் கொண்டு, வாழ்வைப் பிறர்க்களித்தான் அவனும், அதியமானும், நீடிய வாழ்வு தான் பெறுவதை வெறுத்து, ஒளவையார்க்கு அளித்தான்; ஆகவே அதியமான், நீலகண்டனுக்கு நிகராயினன், நஞ்சுண்டும் சாவாது நெடுநாள் வாழ்ந்தான் சிவன்; அதைப் போன்றே, நெடுநாள் வாழ்வதை அதியன் வெறுத்தானாயினும், அவன் நெடுநாள் வாழ்வன்; அவன் வாழவேண்டும் என்று அவனுக்கு நல்வாழ்த்துக் கூறுகிறார் ஒளவையார்.

அதியமானுக்கும், அரசனுக்கும் உள்ள தந்நலந் துறந்த உள்ள வொற்றுமை கருதி அதியமானை நீலகண்டனுக்கு ஒப்பிட்ட ஒளவையார், "நீலமணி மிடற்று ஒருவன் போல” என்று கூறினாலே போதும்; அவர் அவ்வளவோடு நில்லாமல், "பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி" என்ற வேறோர் சிறப்பினேயும் சிவனுக்கு ஏற்றிக் கூறியுள்ளார்; அவ்வாறு, அவனை விசேடித்துக் கூறியதால், துன்பத்தால் தேய்ந்து வந்தாரைத் தலையில் வைத்துப் போற்றிக் காக்கும் அவன் பண்பைக் குறித்தாராயிற்று; அதனால், நாம் பெறும் பொருள், சிவனோடு ஒப்புக் கூறப்படும் அதியமானும், பொருளால் வறியராய்த் தன்கண் வரும் புலவர்களைச் சிறப்பாக வரவேற்றுப் போற்றிப் பேணும் இயல்புடையான் என்பதாம். சிவனே அடைந்த திங்கள், அதியமானை அடைந்து வாழும் புலவர்களுக்கு உவமையாகக் கூறப்பட்டுளது; அதனால், திங்கள் வளர்வதும் தேய்வதும்போல, புலவர்களும், புரவலர்கள் பொருள் தருந்தோறும் செல்வராய்ப் பின்னர் வறியராய் வாழ்வர் என்பதும், திங்கள், தன்னே ஒருபால், பாம்பு கெளவிக் கொண்டு துன்புறுத்தும் காலத்தும், உலகிற்கு ஒளி செய்தலாகிய தன் கடமையில் தவறுதல் இல்லை; அதைப் போலப் புலவர்களும் தாங்கள் வறுமையுற்ற காலத்தும்