பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

ஔவையார்

களத்தே ஆடவரும், மகளிரும், மற்போர் விளையாட்டும், துணங்கையும் ஆடிமகிழ்வர்; ஆற்றில் புதுப்புனல் வருங்கால், நீர்விழா நிகழ்த்துவதும் உண்டு.

இவ்வாறு செல்வவாழ்வு வாழும் தமிழர்களிடையே, நீர்ப்பாசியின் வேர்போல் நெகிழ்ந்து, கிழிந்துபோன ஆடையும், எண்ணெய்காணாது நாற்றம் நாறும் தலைமயிரும் அரிசி உணவு விரவுதல் இல்லாத வெறும் இலை உணவும் கொண்டு வாழும் வறுமை மிக்க தமிழர்களும் வாழக் காண்கிறோம்.

நம் அருந்தமிழ் மூதாட்டியார் அறிய வாழ்ந்த தமிழர் குதிரைபூட்டிய தேர்களோடு, எருதுகள் இழுக்கும் வண்டிகளையும் பெற்றே வாழ்ந்தனர்; இளைய, வலிய எருதுகள் பூட்டிய வண்டிகளில், உப்பினை ஏற்றிக்கொண்டு, ஊர்பல திரிந்து வாணிபம் செய்யும் உப்புவணிகரும் இருந்தனர்; இவர்கள் எப்பொழுதும் பலர் சேர்ந்தே செல்வர்: எருதுகள் இளையன ஆதலாலும், ஏற்றிய பண்டம் மிகுதியாதலாலும், செல்லும்வழி, மேடும் பள்ளமும் பெருமணலும் சேர்ந்து செல்லுதற்கரியவாம் ஆதலாலும், இடைவழியில் வண்டி அச்சுமுறிந்து போயினும்போம் என அஞ்சி, அவ்விடத்து உதவுவதற்காக, வேறு ஒரு அச்சினை அவ்வண்டியோடு எடுத்துச் செல்வதும் அவர்கள் வழக்கமாம்; அவர்கள் வண்டி மேற்கூடு பெறுவதில்லே, அவ்வுப்பு வணிகர் உமணர் எனப்படுவர்.

தமிழர், தம் மணவிழாக்காலத்தே, முரசும் சங்கும் ஒலிக்கச் செய்வர்; அவர்கள் அமரரைப் பேணினர்; வேள்விசெய்து ஆவுதி அருத்தினர்; பார்ப்பார்க்குப் பூவும், புனலும் சொரிந்து பொன்தானம் புரிந்தனர்; முத்தீ வளர்த்தனர்; அதை வழிபட்டனர்; குலமகளிர்க்குக் குறை நேர்ந்தவழி, குறமகளிரை அழைத்துக் குறிகேட்டறிந்து அமைதி கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்; போர்ப்புண்பெறாது வீரர் மடிந்தால், மறைந்த அவர் உடலைத் தருப்பைப்புல்மீது கிடத்தி