பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஔவையாரால் பாடப்பெற்றோர்

57

(1) அதியமான் :

சேலம் மாவட்டத்தில் தர்மபுரி என வழங்கும் தகடூரைத் தலைநகராகக் கொண்டு அதியர் என்ற குறுநில அரசர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர்; தகடுர், போரிடை வெற்றியல்லது தோல்விகாணாப் பேராண்மை யொன்றையே பெறற்கரும் பேறாகக் கருதும் வீரர் பலர் வில்லேந்திக் காத்து நிற்கும் காவற்காடு சூழ்ந்தது; அந் நகருள், அரசர்புகழ் பாடிவரும் இரவலர் வேண்டுமானால் நுழைதல் இயலுமேயன்றிப் பகையரசர் எவரும், கனவிலும் நுழைய நினையார்; அத்துணைக் காவல் அமைந்தது அந்நகர்; அவ்வதியர் சேரமரபினரோடு உறவுடையவர்; அதனால், "போந்தை வேம்பே, ஆர் என வரூஉம் மாபெருந்தானை மலைந்த பூவும்" எனக் கூறியவாறு, அச் சேரர்க்கு உரித்தெனப்பட்ட பனந்தோட்டையே இவர்களும் மாலையாகப் பெற்றிருந்தனர். பெறற்கரும் பெருமைவாய்ந்த கரும்பைப் பிறநாட்டினின்றும் முதற்கண் இவண் கொணர்ந்த பெருமை, இவ்வதியர்க்கே யுரித்து. கொல்லிக் கூற்றமும், குதிரைமலையும் இவர்க்கு உரியவாய் இருந்தன; கி. பி. இரண்டாம் நூற்றாண்டு எனப்படும் சங்க காலத்தே வாழ்ந்த இவர்கள், கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலும், விசயாலயன் வழிவந்த பிற்காலச் சோழர்களுக்குத் துணைவர்களாக விளங்கினர் என அறியப்படுதலால், இவர்களும், மூவேந்தர்களைப் போன்றே நெடிதாண்ட பெருமரபினர் என்பது புலனாம்.

இவ்வளவு பீடும் பெருமையும் மிக்க மரபிலே, அஞ்சி என்பான் ஒருவன் இருந்தான் இவன் அதியர்மரபிலே வந்த பல்லோருள்ளும் சிறந்தோன் ஆதலின், கிழார் என்ற வேளாளர் குடியிலே பிறந்து சிறந்தமையால், பெரியபுராண ஆசிரியர் இயற்பெயரான் அன்றி, குலப் பெயரால் சேக்கிழார் என அழைக்கப்படுதலே போல், இவனும் இயற்பெயரான் அன்றி, குலப்பெயரால் அதியமான் எனவும், அதியர் மரபிலே வந்த அரசருள் சிறந்தோன் என்ற பொருளில் அதியமான் நெடுமான் எனவும்,