பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௩. ஔவையாரால் பாடப்பெற்றோர்


"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில் வலவன் ஏவா வானவூர்தி எய்துப"

என்பதை நம்பியவர் நம் தமிழர்; 'புலவர் பாடாது வரைக" எனப் புலவர் பாடமை தமக்கு இழிவாம் என்று கொண்டனர் பழந்தமிழ்க் காவலர்: பழந்தமிழ்ப் பாவலர்களும், "பாடறிந்தொழுகும் பண்பினாரை' யன்றிப் 'பீடில் மன்னரைப்" பாடாமையைத் தம் பண்பெனக் கொண்டு பாராட்டினர்; சிறந்த புலவர் பாடலைப் பெறுவது தமக்குப் பெருமையாம் என அரசர்கள் கொள்வதைப் போன்றே, பேரரசர்களைப் பாடி அவர் பால் பரிசில் பெறுவதைத் தமக்கும் பெருமையளிக்கும் செயலாகக் கொண்டனர் புலவர்களும். ஒளவையார் பாக்கள் துணைகொண்டு நோக்கியவழி, அதியமானும், அவன் மகன் பொகுட்டெழினியும், நாஞ்சிற்பொருநனும், சேரமான்மாரிவெண்கோவும், சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியும் பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதியும் அவர் பாடலை நேரிற்பெற்றுத், தாம் பெருமையுற்றதோடு, அவர் வேண்டும் பரிசில் அளித்து அவரையும் பெருமைப்படுத்தினர் என்பது புலனாம். தனக்குரிய பறம்புமலைக் குருவிகளை ஒளவையார் பாராட்டினர் என்ற புகழ் பாரிக்கு உரித்து. இவ்வாறு அக்கால அரசர்களைப் பாராட்டியதோடு, அருந்தமிழ்ப் புலவர்கள் சிலரையும் ஒளவையார் பாராட்டியுள்ளார்; கபிலரும், வெள்ளிவீதியாரும் அவ்வாறு, அவர் பாராட்டுதலைப் பெற்ற புலவர்களாவர்; இவர்களையே அன்றி, கோசர் என்ற இனத்தாரையும் ஒளவையார் பாட்டியுள்ளார்; இங்குக் கூறிய இவர்கள் வரலாறு ஒவ்வொன்றும், விரிந்து நீண்டு கிடப்பதால், அவர் வரலாறு முற்றும் அறிவிக்காமல், அவர் பற்றி ஒளவையார் கூறுவனவற்றை மட்டும் தொகுத்துரைக்க விரும்புகிறேன்.