பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஒளவையார்

ஒளவையார் வறுமையில்வாடி வருந்துபவர்; அரச வாழ்வில் அகமகிழ்ந்திருக்கும் மன்னன் தான் என்று வேற்றுமை பாராட்டினான் அல்லன் அதியமான்; அழுக்கேறி முடைநாறும் அவர்தலை; நீரில் வளர்ந்து முதிர்ந்த நீர்ப்பாசியின் வேர்போல் நெகிழ்ந்து கிழிந்துபோன அவர் ஆடை; இவைகண்டு அவரை அணுக அருவருப்புக் கொண்டானல்லன்; ஆண்டு முதிர்வால் ஆடித்தளரும் அவரை அணைத்துக்கொண்டே அழைத்துச் சென்றான் அரண்மனேயுள்ளே; அவர்தம் வழிநடைத்தளர்ச்சியும் உடல் மாசும் ஒருங்கேபோக நீராட்டினான்; அழுக்கேறிய அவர் ஆடையை நீக்கி, மல்லிகைமலர்போல் மென்மையும், வெண்மையும் வாய்ந்த ஆடை அளித் தான்; இருக்கையில் அருகே இருத்தித், திங்களைச் சூழ்ந்த உடுக்களே போன்று, பொன்னாலான சிறுகலம் பல சூழ இடையே அமைந்த வெள்ளியாலான வெண்கலத்தில் கறிவிரவு நெய்சோறிட்டு, அதைக் கையாலெடுத்து ஊட்டினான்; அவர் மகிழ்ந்து பாடுமாறு, மணம் வீசும் தேன்பல அளித்து மகிழ்ந்தான்; இவ்வாறு ஒளவையாரை வரவேற்று ஆவனசெய்து வழிபட்ட அவன், அவரோடுவந்து, அவ்வூர்ப் பொதுவிடத்தே அயர்ந்து வதியும் அவர் தம் சுற்றத்தாரையும் அழைத்து, அவர்க்கும். அவர்வறுமை நீங்கும் அளவு வேண்டும் செந்நெற்குவியல் பல அளித்துச் சிறப்புச் செய்தான்.

அதியமான் வழிபட, அவன் அரசவைப்புலவராய் அமர்ந்திருந்தார் ஒளவையார்; ஒருநாள் அதியமானுக்கு. அருமையான நெல்லிக்கனியொன்று கிடைத்தது; அதியமான் தகடுர்க்கண்மையில் ஒரு பெருமலை; அம் மலையின் உச்சி அடைதற்கரிய உயரமும் அருமையும் உடையது; அங்கே உளது ஒர் அருமையான நெல்லிமரம்; அதிலுள்ள கனி, உண்டார் உடலை ஊறு இன்றி நெடுநாள் வாழச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது: அக் கனியில் ஒன்றை அரும் பாடுபட்டுக் கொணர்ந்தான் அதியமான். அக் கனியுடன் அரண்மனை நுழைந்த அதியமான், அரண்மனையில் ஒளவை: