பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையாரால் பாடப்பெற்றோர்

65

யார் இருப்பது கண்டான்: அவன் எண்ணம் மாறிற்று: தன்னினும் அவரே உலகில் வாழத்தக்கவர்; தான் வாழ்வதினும், அவர் வாழின் உலகிற்குப் பெரும்பயன் விளையும் என்று எண்ணினான். ஆகவே, அந் நெல்லிக்கனியினை ஒளவையார்க்கே அளிப்பது என முடிவுசெய்தான். ஆனால், ஒளவையார் அக்கனியின் அருமை அறியின் அதை அவர் உண்ண மறுப்பார்; தன்னேயே உண்ண வற்புறுத்துவர் என்பதையும் அறிந்தான். ஆகவே, அக் கனியின் அருமை பெருமைகளே அவர்க்கு முன்னர் அறிவியாதே, அதை ஒளவையார்க்கு அளித்தான்; அன்புடையார் அளிக்கப் பெறுவன யாவையே யாயினும், அவற்றை இனிமை நிறைந்ததாகக் கொண்டு ஏற்றுக்கொள்வதே ஒளவையார் பண்பாதலின், அஃது எளிதான நெல்லிக்கனி தானே என்று குறைவாக மதியாது, அன்புடன் வாங்கி வாயிலிட்டு உண்டார். அவர், அதை உண்டார் என்பதறிந்த அதியமான், ஒளவையாரை நோக்கி, "அறிவுசான்ற ஒளவையே! தாங்கள் இப்போது உண்ட நெல்லிக்கனி ஏனைய கனிகளைப் போன்றதன்று; உண்டார், கேடின்றி நீண்டநாள் இந்நில உலகில் வாழ்வர்; அவ்வளவு அருமையுடையது; மேலும் எளிதில் கிடைக்கக் கூடியதுமன்று; நானும், இவ் வுலகமும் வாழ்வது, தங்கள் அறிவுடைமையால்; தங்களைப்போன்ற பெரியோர்கள் வாழ்வதாலேயே உலகம் வாழ்கிறது; ஆகவே, தாங்கள் வாழவேண்டும் பல்லாண்டு என விரும்பினேன்; ஆகவே, தங்களுக்களித்தேன் இக் கனியினை இக் கனியின் சிறப்பைத் தங்களுக்கு முன்னரே அறிவித்திருப்பின், அதைத் தாங்கள் உண்ண மறுத்து என்பால் கொண்ட அன்பின் மிகுதியால் என்னையே உண்ண வேண்டுவீர் என்று அறிந்தே, அதை முன்னர் அறிவியாது போனேன்," என்று அக் கனியின் அருமையினை ஒளவையார் உணரச் செய்தான்.

அக் கனியினை உண்ட ஒளவையார், அதியமான் அதைத் தான் உண்ண மறுத்ததோடு, அதன் அருமையை அறிவியாது அளித்த அவன் அன்பின் பெருக்கை அறிந்து