பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையாரால் பாடப்பெற்றோர்

69

வழுவில் வன்கை மழவர் பெரும!
இருநிலம் மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீகளம் புகினே?"

(புறம்:௯0)

என்று அதியமானுக்கும் அறிவுரை கூறினர் ஒளவையார்.

ஆனால் அதியன் ஆத்திரம் அடங்குவோனாகத் தோன்றவில்லை; ஒளவையார் அறவுரை அவன் காதில் நுழைந்திலது, அவன் போர்வேட்கையும், வெறியும் ஒளவையார் அறிவுரையினையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தன ஆயின; அவன் அவரை நோக்கி "அன்புடையீர்! பகைவர் என் படைவலி கண்டு பயந்து பணிந்துபோவர்; பாய்ந்து தாக்கார் என்றெல்லாம் கூறுகின்றீர்; ஆனால், பகைவர்பால் அப்பண்பு காணல் அரிது; அதோ பார்மின் அவர்கள் போருக்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்கின்றனர்; நம் யானைப்படை நடமாடல் கண்ட அப்பகைவர், தங்கள் அரணைச் சேர்ந்த வாயில்கட்கெல்லாம், கதவும் கணையமரமும் புதியவாகப் பொருத்துகின்றனர்; நம் குதிரைப்படையின் குளம்பொலி கேட்ட அவர்கள் அதைத் தடுத்து நிறுத்துமாறு, தம் காட்டு: வாயில்களை எல்லாம் இரண்டிரண்டாகக் கவைத்த வேல முட்கொண்டு அடைக்கத் தொடங்கிவிட்டனர்; நம் வீரர் ஏந்திய வேற்படை கண்டு வெகுண்ட அவர்கள், தங்கள் , கேடயங்களுக்கெல்லாம் பிடி பொருத்தத் துணிகின்றனர்; இவை எல்லாவற்றிற்கும் மேலாகப், பேராண்மை மிக்க நம் போர்வீரர், போர்ப் பரணிப்பாடல் கேட்ட அவர்கள், தங்கள் அம்பறாத்துாணிகளில் அம்புகளை அடைக்கவுமாயினர்; இவ்வாறு நம் படைகண்டு பயந்து போவதன்றி, அவற்றின் எதிர்ப்பை ஏற்றுநடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அவர்களா பணிந்துபோவர்? பணியார், அவரைப் போரிட்டுப் பணியவைத்தல் இயலுமே அன்றி அச்சங்காட்டிப் பணியவைத்தல் இயலாது; ஆதலின், அவரை வெல்லாது விடேன்", என வெகுள்வானாயினன்.

அதியன், அவ்வாறு வெகுண்டவிடத்தும், ஒளவையார் அமைதிகாணும் ஆர்வத்தை விட்டார் அல்லர்: