பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

ஒளவையார்

"அதிய! நின்னை ஒன்று வினவுகின்றேன்; சினவாது விடை கூறுவாயாக; உயிர் போமளவு உடல்நலம் குன்றிய ஒருவர் அருகில் இருக்கும் அவர் உறவினர், வெண் கடுகுப் புகையினை அவர் இருக்கும் அறையில் எழுப்புகின்றனரே ஏன் தெரியுமா? அவன் உயிரைக் கவர்ந்து செல்ல வரும் எமன், ஆங்கே ஐயவிப்புகை எழல்கண்டு அஞ்சி, அவன் உயிரைக் கவர அவ்வறையினுள் நுழையாதே திரும்பிவிடுவன் என்ற நம்பிக்கையால் அன்றோ அவர்கள் அப்புகை எழுப்புகின்றனர்? ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வது கண்டு எமன் அஞ்சி வாராமல் நின்றுவிடுவது உண்டோ? இல்லேயன்றே? அதைப்போன்றே, நின் படைவலி கண்ட நின் பகைவர், தற்காப்புமுறைகளை மேற்கொள்கின்றனர். எனினும், அவர்களைத் தப்பாது: அழிக்கும் ஆற்றல் நினக்கு உண்டு; அத்தகைய பேராண்மை வாய்ந்தோய் நீ; ஆதலின், அவர் செயல்கண்டு எள்ளி நகையாது, எதிர்த்துப் போரிட நினையாதே! போர் நிகழின், வளமிக்க நாடெல்லாம் நின்படையால் பாழாகும். அது கண்டாவது இரக்க உள்ளம் கொள்வாயாக,” என்று வேண்டினார்.

அதியமானுக்கும், அவன் பகைவர்க்கும் அறிவுரை, பல கூறி நாட்டில் அமைதி நிலவ முயன்ற ஒளவையார், அஃதோடு நில்லாது, அதியமான் பகைவர்பால் தானே நேரில் சென்று ஆவணகூறி அமைதி காணவும் தயங்கினாரல்லர்; அதியமான் பகைவருள் ஒருவனும், தொண்டையர்குலத் தோன்றலும், பெரும்படை உடையானும் ஆயதொண்டைமான் என்னும் அரசன்பால், அதியமானுக்காகத் துTதுசென்று, அவனிடத்தே, அதியமான் பீடும் பெருமையும் தோன்றக்கூறி, அத் தொண்டைமானை அதியமானேடு போரிட அஞ்சுமாறு செய்து மீண்டார்.

இவ்வாறு, தம்மால் ஆகும்வரை முயன்றும் அமரைத்தடுத்தல் அவரால் இயலாது போயிற்று; அதியமானுக்கும், அவன் பகைவர்க்கும் கடும்போர் தொடங்கி விட்டது.