பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. கபிலரும் காரியும் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளதும், பெண்ணையாற்றுப் பாய்ச்சலை உடையதும், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டதுமான நாடு, பண்டைக் காலத்தில் மலாடு அல்லது மலையமானாடு என்ற பெயர் பெற்றிருந்தது. அந்நாடு, காடும், மலைகளும்,சூழ நடுநாட்டில் இருப்பதால், கடலாலோ, பகைவர்களாலோ அழிவுறுவதில்லை. அந்தணர் பலர் வாழும் அழகிய நாடாக இருந்தது. அது. அந் நாட்டை மலையமான் என்ற அரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்களுக்கு உரியதாக முள்ளூர் என்ற அரண்மிக்க மலையொன்றும் உண்டு. கபிலர் காலத்தில் அந்நாட்டை ஆண்டுகொண்டிருந்தவன் காரி என்பவன் ; மலையமான் திருமுடிக்காரி எனவும் அழைக்கப்பெறுவான். கடையெழு வள்ளல்களுள் ஒருவன் என்ற பாராட்டைப் பெற்றவன் ; தன் நாடு நோக்கிவரும் பாணர், கூத்தர், புலவர் முதலிய இரவலர்களுக்குக் களிறும் தேரும் கொடுத்துச் சிறப்புச் செய்தவன் ; காரி என்ற தன் பெயரே கொண்ட குதிரைமீது ஏறிப் போரிடும் பெருவீரன்;தமிழ் நாடாண்ட பேரரசர்களாகிய மூவேந்தரும் தங்கள் படைக்குத் துணைபுரியுமாறு இவனைப் பெரிதும் வேண்டுவர். முள்ளூர் மலையைக் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையால், பெரும் படையுடன் வந்த ஆரிய அரசர்களைக் காரி, எதிர்த்துப் போரிட்டுத் தோற்றோடச் செய்தான் ; கொல்லிமலை ஆண்ட வல்வில்ஓரி என்ற வில்லாண்மை மிக்க வீரனைக்கொன்று, அவன் கொல்லியைத் தன் நண்பணாகிய, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்கு அன்பளிப்பாக அளித்தவன்; அங்கே தான் பெற்ற வெற்றியின் அறிகுறியாக அக் கொல்லிநகர்த் தெருக்களில், பெரும் ஆரவாரங்களுக்கிடையே ஊர்வலமாகவந்து வெற்றிவிழாவும் கொண்டாடினான். பகைவர் பசு நிரைகளைப் போரிட்டு ஒட்டிக்கொண்டு வருவதில் பேராற்றல் மிக்கவன்.