பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரணர்

سیستمهمست.

க. தோற்றுவாய்

தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற் றப்படும் காலம், புலவர்கள் பலர் வாழ்ந்த சங்ககால மாகும். தமிழர்தம் அழியாப் பெருஞ் செல்வங்களாகிய சிறந்த பல இலக்கியங்கள் தோன்றிய காலம், அச் சங்க காலமே. இலக்கிய வளத்தால் எழில்பெற விளங்கிய காலம். அது, இலக்கியம், மக்கள் வாழ்வில் காணும் நலங்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறும் ஒரு காலக் கண்ணாடி. நல்லன என்று கண்டனவற்றையும், நல்லன என்று எண்ணியவற்றையும் எடுத்துக் கூறிப் பின்னுள்ளோரை நன்னிலைக்குக் கொண்டு செலுத்தும் ஒரு நல்ல வழிகாட்டி. இலக்கியத்தின் உயர்வும் தாழ்வும், அவ்விலக்கியத்திற்குரிய மக்கள் வாழ்வின் உயர்வு தாழ்வுகளுக் கேற்பவே விளங்கும். நல்லியல்புடைய மக்களிடையே நல்ல இலக்கியம் தோன்றும் ; மக்கள்-வாழ்வு, வளமற்ற பாலைபோல் பாழ்பட்டதாயின், அவர்களிடையே தோன்றும் இலக்கியமும் பாழ்பட்டே காணப்படும். நிலத்தியல்பால் நீர் திரிதலேபோல், நல்லோரிடையே தோன்றும் இலக்கியம் நல்லன ஆதலும், தீயோரிடையே தோன்றும் இலக்கியம் தீயன ஆதலும் இயற்கை. கரும்பு விளைவது கழனியில்; களர்நிலத்தில் அன்று. இலக்கியம் நல்லன ஆயின், அவ் விலக்கியத்திற்கு உரிய மக்கள் நல்ல ராவர்; இலக்கியம் தீயவாகக் காணப்படின், அவ் விலக்கியத்திற்குரிய மக்கள் தீயராவர். ஆகவே, ஒரு நாட்டு மக்களின் தகுதி தகுதியின்மைகளை அறிந்து காட்டும் அளவு கோலாக இலக்கியத்தையே கொள்வர் அறிவுடையோர்.