பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 ப ர ண ர்

சங்ககாலம் என அழைக்கப்பெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள், வளம் பல நிறைந்த வாழ்வுடையராயினர். நாடு செல்வத்தில் சிறந்து விளங்கிய காரணத்தால், அக்காலப் புலவர்கள், பொருள்வளத்தைப் போற்றவேண்டிய கவலையற்றவராயினர். நிரம்பிய வாழ்க்கையும், நிறைந்த உள்ள மும் பெற்றுத் திகழ்ந்த புலவர்கள், பொன்றாக் கலேவளத் தைப் போற்றிப், புகழ்படைத்த பேர் இலக்கியங்களை இயற்றிச் சென்றனர். "சோற்றுச் செருக்கல்லவோ, தமிழ் மூன்று உரை சொல்வித்ததே" என்று பிற்காலப் புலவர் ஒருவரும் கூறுவர். புலவர்தம் அவ்வுள்ளப் பய னாகவே, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கனக்கு, ஐம்பெருங் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் முதலிய இலக்கியப் பெருநூல்களும், தொல்காப்பியம் போன்ற ஒல் காப் புகழ்கொண்ட இலக்கண நூல்களும் தோன்றின.

தமிழகம் பண்டு தான் பெற்றிருந்த செல்வச்சிறப்பை இழந்துவிட்ட இக்காலத்திலும், தமிழரும், தமிழகமும், உலகஅரங்கில் உயர்வுடையராக மதிக்கப் பெறுவதற்குக் காரணமாய் விளங்குவன, தமிழ்மொழி பெற்றிருக்கும் தனிச்சிறப்புடைய இலக்கியச் செல்வங்களே ஆகும். ஆகவே, அவ் விலக்கியப் பெருஞ் செல்வங்களை அளித்து, அதன் வழியாகத் தமிழர்க்குத் தாழ்விலாச் சிறப்பளித்த அப் புலவர் பெருமக்கட்குத் தமிழ்நாட்டார் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். "நன்றி மறப் பது நன்றன்று". அவர்க்கு இவர் செய்யக்கூடிய கைம் மாறு ஒன்றும் இல்லை எனினும், அவரை மறவாது அறிந்து மனத்திடை மதிப்பதாவது செய்வாராக.

ஆனால், பெறுதற்கரிய பேரிலக்கியப் பெருஞ் செல் வங்களைப் படைத்தளித்த அப் புலவர்களின் வரலாற்றினை நம்மால் அறிய முடியவில்லை. புலவர்கள் வாழ்ந்த காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட காலமாகும். அக்காலத்தே வாழ்ந்த ஒருவர் வரலாற்றை, இக்காலத்தார் அறியத் துணை புரிவனவற்றுள் சிறப்புடையன நான்கு :