பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

சங்க இலக்கியத்

அகன்ற பட்டையான முட்டு வேர்களைக் கொண்டது. அடிமரத்திலும், கிளைகளிலும் முட்டு முட்டான கூம்பிய முட்கள் இருக்கும். களிறு தன்னுடைய தினவைப் போக்கிக் கொள்ளுதற்கு இம்முள்ளமைந்த அடி மரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்ளும். இம்மரம் மலைப் பகுதியான பாலை நிலத்தில் வளரும். இவ்வுண்மைகளைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

“ஈங்கை இலவம் தூங்குஇணர்க் கொன்றை”-குறிஞ். 86

“நீள்அரை இலவத்து அலங்கு கிளை”-பெரும் . 83

“நீள்அரை இலவத்து ஊழ்கழிபன்மலர்”-அகநா. 17 : 17

“ஓங்கு சினை இலவம்”-ஐங். 338 : 2

“முள்ளரை இலவத்து ஒள்ளிணர் வான்பூ”-ஐங். 320

“முளிகொடி வலந்த முள்ளுடை இலவம்”-நற். 105 : 1

“களிறுபுலம் உரிஞ்சிய கருங்கால் இலவம்”-அகநா. 309 : 7

இந்த இலவ மரத்தின் பூ மலையுறு தீயை ஒத்த செந்நிறமானது. இலைகள் எல்லாம் உதிர்ந்த பின்னர், மலர்களைப் பரப்புவது. இம்மரத்தில் பெருங்காற்று மோதுவதால், இம்மலர்கள் கீழே விழுவது இடியுடன் கூடிய நெருப்பு வானத்திலிருந்து தரையில் வீழ்வதை ஒக்கும். பெருவிழா எடுத்த பழம் பெருமை சான்ற மூதூரில் ஏற்றப்பட்டுள்ள நெய் விளக்குகளிலிருந்து விழும் சுடரை ஒக்கும். வீழ்ந்தவை போக எஞ்சியுள்ள மலர்கள், விடியற்காலையில் வானத்தில் தோன்றும் விண் மீன்களை ஒத்துக் காட்சி தரும். இலைகளே இல்லாமல் அனைத்து மொட்டுகளும் மலர்ந்து நிற்கும் இக்காட்சி, கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றிய சுடர் விளக்கின் அழகுடன் தோன்றும்.

“இலைஇல மலர்ந்த ஓங்குநிலை இலவம்
 மலையுறு தீயின் சுரமுதல் தோன்றும்”
-ஐங். 338 : 2-3

“முள்ளரை இலவத்து ஒள்ளிணர் வான்பூ
 முழங்கழல் அசைவளி எடுப்ப வானத்து
 உருமுப்படு கனலின் இருநிலத்து உறைக்கும்”
-ஐங். 320 : 1-3

“அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்
 நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்
 விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்
 நெய்யுமிழ் சுடரின் கால்பொரச் சில்கி
 வைகுறு மீனின் தோன்றும்”
-அகநா. 17 : 17-21