பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சங்க இலக்கியத்

நெருஞ்சிச் செடி, பசிய சிறு இலைகளை உடையது. பொன் போன்ற நல்ல மஞ்சள் நிறப் பூக்களுடன், கண்களுக்கு இனிய காட்சி தருவது. மலர்கள் முதிர்ந்து காயாகிப் பழுக்கும். நெருஞ்சிப் பழந்தான், ‘நெருஞ்சி முள்’ எனப்படும். வள்ளுவர் இதனை ‘மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ என்பார். கூடியிருந்த காலத்து இன்பம் தந்த காதலன், பிரிந்து துன்பம் தந்தான். இதனை எண்ணி நெஞ்சம் நொந்த காதலி, நெருஞ்சியின் மலரையும் முள்ளையும் உவமையாக்கிக் கூறுகின்றாள்:

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே
-குறுந். 202

இச்செய்யுளைப் பாடியவர் அள்ளுர் நன்முல்லையார், ‘வாயில் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது’ என்பது இப்பாடலின் துறையாகும்.

கண்ணுக்கு இனிமை செய்த புதுமலர், வீயாகி வாடிப் போய் உலர்ந்து விடுவது போலக் காதலர் சின்னாள் தந்த இன்பம் விரைந்து கெட்டதுமன்றி, அம்மலரே முள்ளாயினவாறு போல, இனிய காதலரே, தன்னைப் பிரிந்ததோடன்றித் தொடர்ந்து இன்னா செய்தற்கு என் நெஞ்சு நோகும் என்றவாறு. தைத்த நெருஞ்சி முள்ளைப் பிடுங்கிய பின்னும் வலியிருக்குமாப் போல, வாயில் வேண்டிய தலைவன் செயலை எண்ணி, மும்முறை நோமெனக் கூறி வாயில் மறுத்தாள் தலைவி.

மிக அழகிய மஞ்சள் நிறமுள்ள நெருஞ்சி மலருக்கு ஒரு சிறப்பான இயல்பு உண்டு. இதனைச் ‘சுடரொடு திரிதரும் நெருஞ்சி’ என்றார் அகநானூற்றுப் புலவர் பாவைக் கொட்டிலார். இக் கருத்தைப் புறநானூறு, ஐங்குறுநூறு, சீவக சிந்தாமணி முதலிய பண்டைய இலக்கியங்களிலும் காணலாம். நெருஞ்சிமலர் காலையில் கதிரவனை நோக்கிக் கிழக்குப் புறமாகப் பூத்து நிற்கும். மாலைப் பொழுதில் கதிரவனைக் கண்ட வண்ணம் மேற்குப் புறமாகத் திரும்பி நிற்கும்.

நெருஞ்சி மலரின் இவ்வியல்பு, ஒரு தாவரவியல் உண்மையாகும். இதனை கதிரோனுடைய கதிக்கு ஏற்பத் திரும்பும் இவ்வியல்பு, பூக்குந் தாவரங்களில் சூரியகாந்தி ‘ஹீலியாந்தஸ் ஆனுவஸ்’ மலருக்கு உண்டு. சூரிய காந்திச் செடி அமெரிக்க