பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

131

நாட்டைச் சேர்ந்தது என்பர். இதன் இவ்வியல்பு ஆய்வு செய்யப் பட்டுள்ளது. (Bot Gaz : 29:197) இதற்குக் கதிர்நோக்கி இயங்குதல் (Heliotropism) என்று பெயர். இவ்வியல்பு வேறு மலர்களுக்கு இல்லை. நெருஞ்சி மலரில் உள்ள இவ்வரிய இயல்பைப் பற்றி இதுகாறும் யாரும் ஆய்வு செய்ததாக யாம் அறிந்த மட்டில் இல்லை.

கதிர் நோக்கி இயங்கும் இவ்வியல்பினைப் போலவே, ஒளியை நோக்கி இயங்கும் இயல்பு ஒன்றுண்டு. இதனை விதை முளைத்து வரும் போது முளைகளில் காணலாம். இதற்கு ஒளி நோக்கி இயங்குதல் என்று பெயர் (Phototropism). இவ்விரு வகையான இயக்கங்களும் ஒன்றல்ல.

நெருஞ்சி மலர் சுடரொடு திரிதருவதைக் குறிக்கும் அகநானூற்றுப் பாடலில் இவ்வியல்பை உவமையாக்கிப் பாடிய அகப்பொருள் கருத்து சுவைக்கத் தக்கது. நயப்புப் பரத்தை இற் பரத்தை என்ற இரு பரத்தைமார்கள், மருதத் திணைத் தலைவவனாகிய ஊரனுக்கு உண்டு. நயப்புப் பரத்தை, இற்பரத்தையின் பாங்காயினார் கேட்கும்படியாகப் பின் வருமாறு பேசுகிறாள்: “துணங்கைக் கூத்து விழாவிற்று ஊரனுடைய தேர்தர வந்த இற் பரத்தை என் எழிலை ஏசிப் பேசினாள் என்பர். அதற்கு யான் அங்கு வராததே காரணம். நான் வந்திருந்தால், கதிரவனை நோக்கியவாறே அதனுடன் திரிதரும் நெருஞ்சி மலரைப் போல, எனது அழகைக் கண்டு ஊரனை என்னோடு திரியச் செய்திருப்பேன். . . . ” என்று. இதனை,

“தீம்பெரும் பொய்கைத் துறைகேழ் ஊரன்
 தேர்தர வந்த நேர்இழை மகளிர்
 ஏசுப என்பஎன் நலனே, அதுவே
.... .... .... .... .... ....
 முழவுஇமிழ் துணங்கை தூங்கும் விழவின்
 யான்அவண் வாராமாறே, வரினே வானிடைச்

 சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
 என்னொடு திரியான் ஆயின் .... ....”

- அகம் : 336 : 10-19


என்ற வரிகளில் காணலாம். இப்பாடல், கதிரவனால் நெருஞ்சிப் பூ. எவ்வாறு கவரப்படுகிறது என்பதைப் புலப்படுத்தும். இக்கவர்ச்சியால், இப்பூ கதிரவனுக்கே உரிமையுடையது எனக் கூறுவது போன்று ஒரு தலைவி கூறுகிறாள்.