பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

199

படும். மலைப்பாங்கில் சிறு புறவில் வளரும். இம்மரம் பூத்த நிலையில், மிக அழகாகத் தோன்றும். மலரில் மணமில்லை.

கபிலர் குறிஞ்சிப் பாட்டில் பல்வேறு பூக்களையெல்லாம் கூறி, இறுதியாகப் ‘புழகுடன்’ என்கின்றார்.

“அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன்”-குறிஞ். 96

இவ்வடிக்கு நச்சினார்க்கினியர் ‘அச்சாரலிடத்துத் தம்மில் மயக்கமுடைய வாய்ச் சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற’ பிற பூக்களையும் பருத்த அழகினையுமுடைய ‘மலை எருக்கம் பூவுடனே’ என்று உரை கண்டார். இப்புழகினைப் பற்றிச் சங்க நூல்களில் இன்னொரு குறிப்பும் கிடைக்கிறது.

“அழுந்துபட்டு அலமரம் புழகுஅமல் சாரல்”-மலைபடு. 219

இவ்வடிக்கு நச்சினார்க்கினியர், கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் ‘மலைஎருக்கு’ நெருங்கின பக்கமலையில் என்று உரை கூறுவர்.

மேலும் பெருங்கதையில், ‘அகன்றலைப் புழகும்’[1] என வரும் அடியொடும் உற்று நோக்கினால், ‘புழகு’ என்பது ‘மலைஎருக்கு’ எனப்பட்டது என்றும், இம்மரத்தின் மேற்பகுதி அகன்றிருக்கும் என்றும், இதன் அடியில் இதற்குக் கிழங்கு இருக்குமென்றும், இது மலைப்புறத்தே வளரும் என்றும், இதனுடைய பூக்கள் செவ்விய நிறமுடையன என்றும், இம்மலர்கள் உதிர்ந்து கிடப்பது சாதிலிங்கப் பூவை பரப்பினாற் போன்று காட்சி தருமென்றும், இதன் அழகிய அடிமரம் பருத்திருக்கும் என்றும் அறிய முடிகின்றது.

இக்குறிப்புகளைக் கொண்டு இதனுடைய தாவரவியல் பெயரை அறுதியிட முடியவில்லை. இதனைப் புனமுருங்கையுமாம் என்பர் என்பது கொண்டு, ஒரு வேளை இது கலியாண முருங்கையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் பூக்கள் இதன் மரத்தடியில் அரக்கு விரித்தன்ன காட்சி தரும். அங்ஙனமாயின், இதனைத் தாவர இயலில், எரித்ரைனா இன்டிகா (Erythrina indica) என்று குறிப்பிடலாம். இதற்குக் ‘கலியாண முருங்கை’ என்று பெயர்.

அங்ஙனமாயின், இதனைக் ‘கவிர்’ எனப்படும் கலியாண முருங்கையில் விரிவாகக் கூறியுள்ள தாவரவியல் விளக்கத்தைக் கண்டு கொள்ளலாம். எனவே, புழகு என்பது கவிர், புனமுருங்கை, கலியாண முருங்கை, மலைஎருக்கு என்றெல்லாம் கூறப்படும் என்பதாயிற்று.


  1. பெருங். 12:27