பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முல்லை
ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
(Jasminum auriculatum,Vahl.)

சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பேசப்படுவது முல்லை ஆகும். காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம் எனப்படும். பொருள் தேடவும், அரச ஆணையை ஏற்றும் தலைமகன் தனது தலைவியைப் பிரிவான். அவன் திரும்பி வருந்துணையும் தலைமகள் அவனது பிரிவை ஆற்றியிருப்பதைத்தான் முல்லை ஒழுக்கம் என்பர். முல்லை என்றாலே கற்பு எனப்படுதலின் கற்புமுல்லை என்ற பாகுபாடும் காணலாம். முல்லையின் பெயரால் ‘பண்’ ஒன்றுண்டு. ‘முல்லையத் தீங்குழல்’ என்றும், ‘முல்லை நல் யாழ்ப்பாண’ என்றும் ‘முல்லை’யானது குழலொடும் யாழொடும் பேசப்படும். தமிழ்க்குடிமகளின் அகவாழ்விலும், புறவாழ்விலும் இணைந்துள்ளது முல்லையாகும்.

சங்க இலக்கியப் பெயர் : முல்லை
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : கொகுடி, தளவம்
பிற்கால இலக்கியப் பெயர் : முல்லை, தளவம்
உலக வழக்குப் பெயர் : முல்லை, கொகுடி
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
(Jasminum auriculatum,Vahl.)

முல்லை இலக்கியம்

இனி, முல்லையைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவனவற்றைக் காண்போம்.

செந்தமிழ் இலக்கியச் சிறப்பெல்லாம் கற்பு, வீரம், கொடை என்னும் சீரிய செம்பொருள்களை விரித்து உரைப்பதில் அடங்கும்.