பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

சங்க இலக்கியத்


‘காரும் மாலையும் ‘முல்லை’ என்பது நூற்பா (தொல். பொருள். 6) ஆதலின், கார் காலத்தையும், மாலைப் பொழுதையும் குறிப்பது முல்லை மலர். இதனைப் பின்வரும் அடிகளில் காணலாம்.

“கார் நயந்து எய்தும் முல்லை ”-ஐங். 454

“எல்லை பைபயக் கழிப்பி முல்லை
 அரும்புவாய்அவிழும் பெரும்புன் மாலை”

-நற். 369 : 3-4


கற்பு முல்லை :-

மேலும், மகளிரின் கற்பு ஒழுக்கத்திற்கு அறிகுறி முல்லையாகும். கன்னியாக இருந்த ஒரு பெண் முல்லை மலரைத் தேடிய அளவாலே, அவள் கற்பு ஒழுக்கத்திற்கு உரியவள் ஆகின்றாள். அன்றி ‘கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு’ என்பர் நச்சினார்க்கினியர். அதனால், கற்பின் சின்னம் முல்லை என்று அறிதல் கூடும். இவ்வுண்மையைச் சங்கச் சான்றோர் விதந்து கூறுப.

“முல்லை சான்ற கற்பின் மெல்லியல் ”
-நத்தத்தனார்-சிறுபாண். 30

“முல்லை சான்ற கற்பின்
 மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே”

-இடைக்காடனார்-நற். 142 : 10-11

“முல்லை சான்ற கற்பின்
 மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே”

-இடைக்காடனார்-அகநா. 274 : 13-14


‘முல்லை சான்ற கற்பின்’ என்ற சொற்றொடருக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு’ என்று உரை கூறுதலின், இவ்வுண்மை வலியுறுத்தப்படும். இதனால், முல்லை என்ற சொல்லுக்கே கற்பு என்ற பொருளும் தோன்றியது போலும். இதனை,

‘மௌவலும் தளவமும் கற்பும் முல்லை’ என்று சேந்தன் திவாகரம்[1]கூறுவதாயிற்று. ஆகவே கற்பு என்ற மற்றொரு பெயரும் முல்லைக்குரியதாயிற்று.


  1. சேந்தன் திவாகரம்: மரப்பெயர்: 197