பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

467

சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ‘விரிமலர் அதிரல்’[1] என்பதற்கு அரும்பத உரை ஆசிரியர் காட்டு மல்லிகை எனவும், அடியார்க்கு நல்லார் மோசி மல்லிகை எனவும் உரை கூறினர். சங்க நூல்களில், இதன் இயல்புகளைக் காணுமிடத்து இதுவே அதிரல் எனவும், இது காட்டு மல்லிகை எனப்பட்டது எனவும் துணியலாம். இது மௌவல், குளவி, மல்லிகை முதலிய மலர்களினின்றும் வேறுபடுவதற்கு உள்ள ஒரே ஒரு சிறந்த காரணம் உண்டு. அதிரல் கொடியில் உண்டான இதன் முகை, காட்டுப் பூனையின் கூரிய பற்களை ஒத்தது எனவும், இம்முகை மெல்லிய வரிகளை உடையது எனவும் காவல் முல்லைப்பூதனார் கூறுகின்றார்.

“பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன
 வரிமென் முகைய நுண்கொடி அதிரல்”
-அகநா. 391 : 1-2

மெல்லிய இம்முகையில் உள்ள வரிகள் அதிரலுக்குள்ள சிறப்பியல்பு எனலாம். தாவர இயலின்படி, இது மல்லிகையைப் பெரிதும் ஒத்துள்ளது. மல்லிகை குற்றுச்செடி. அதிரல் நீண்டு வளரும் ஏறுகொடி. இவையிரண்டிலும் தனி இலைகளே காணப்படும். கொடியின் அடித்தண்டு பல கிளைகளாகக் கிளைக்கும். ஆதலின், ‘ததர்கொடி அதிரல்’ (அகம். 289) எனப்பட்டது; (ததர்-செறிவு) கொடியும் வலிமையுடையது. அதனால் ‘மாக்கொடி அதிரல்’ (நற். 52) எனவும் கூறப்பட்டது. சுரத்தில் வளரும் கோங்கு மரத்தின் மேல் ஏறிப் படரும் என்றும், இரவில் மலர்ந்திருக்குமென்றும், அதனைக் காட்டு யானை விடியற்காலையில் அரும்புகளுடன் வாங்கிக் கவளங்கொள்ளும் எனவும், அந்த அரிய நெறியில் தனியாகச் செல்ல மக்கள் அஞ்சுவர் எனவும் வேம்பற்றூர்க் குமரனார் கூறுவர்.

“. . . . . . . . . . . . கோங்கின்
 எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்
 பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி
 காண் யானை கவளங் கொள்ளும்
 அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார்
 கெஞ்சுண் மொழிப மன்னே-தோழி”
-அகநா. 157 : 5-10

இக்கொடி தூறாக முளைக்கும் எனவும், பலமுனைகளில் கிளைக்கும் எனவும் கூறுவர். அதனால், ‘அதிரல் விரிதூறு’ [2]எனச் சேந்தன்திவாகரம் விளக்குகின்றது. இத்தூறுகளிலிருந்து படரும்


  1. சிலப். 13 : 156
  2. சேந்தன் திவாகரம்-மரப்பெயர்