பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

சேடல்–பவழக்கால் மல்லிகை)
நிக்டாந்தெஸ் ஆர்போர்-டிரிஸ்டிஸ்
(Nyctanthes arbor-tristis,Linn.)

‘சேடல் செம்மல் சிறு செங்குரலி’ எனக் குறிஞ்சிப் பாட்டில் (82) பயிலப்படும் சேடல் என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பவழக்கால் மல்லிகை’ என்று விளக்கியுள்ளார். பதிப்பாசிரியர் உ. வே. சா. அவர்கள் ‘இது பவழமல்லிகை எனவும். பாரிசாதம் எனவும் வழங்கும்’ என்றார். இவ்வோரிடத்தில் இன்றி. சங்க இலக்கியங்களில் சேடல் காணப்படவில்லை.இச்சிறுமரம் முல்லைக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இதனைப் ‘பவள மல்லிகை சண்பகம் ஞாழல் கோட்டுப் பூவகையே’ என்று கோட்டுப் பூவாகக் கூறும் புட்ப விதி[1]. இது கார்காலத்தில் பூக்கும் முன்னிரவில் பூத்து நல்ல மணம் பெருக்கும். 4 முதல் 8 வரையிலான இதனுடைய அகவிதழ்கள் அடியில் இணைந்து குழல் வடிவாகவும், ஆரஞ்சு செம்மை நிறம் உடையதாகவும் இருக்கும். இதனால் இதனைப் பவழக்கால் மல்லிகை என்று கூறுவது பொருந்தும். இவ்வக இதழ்கள் மேலே 4-8 வெள்ளிய மடல்களாக விரிந்து மிக அழகாக விளங்கும். இதன் தண்டில் முறையில்லாத இரண்டாம் வளர்ச்சி (Anomalous secondary growth) காணப்படுகிறது. ஆதலின், இதன் தண்டு மிகவும் வலிமையாக இருக்கும்.

சங்க இலக்கியப் பெயர் : சேடல்
பிற்கால இலக்கியப் பெயர் : பவழக்கால் மல்லிகை, பாரிசாதம்
உலக வழக்குப் பெயர் : பவள மல்லிகை, பவழ மல்லிகை (மஞ்சள் பூ என்பார் காம்பிள்)
தாவரப் பெயர் : நிக்டாந்தெஸ் ஆர்போர்-டிரிஸ்டிஸ்
(Nyctanthes arbor-tristis,Linn.)

  1. புட்பவிதி