இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கணவிரம்–செவ்வலரி
நீரியம் இன்டிகம்
(Nerium indicum,Mill.)
சங்க இலக்கியத்தில் ‘கணவிரம்’ எனப் பயிலப்படும் புதர்ச் செடி ‘செவ்வலரி’ ஆகும். இதில் வெள்ளலரியும் உண்டு. இச்செடி கொத்துக் கொத்தாகப் பூக்கும். இதனை யாரும் சூடுவதில்லை. இது சிவனுக்குரிய மலர் என்பர். இதில் இன்னொரு வகையும் உண்டு.
சங்க இலக்கியப் பெயர் | : | கணவிரம் |
உலக வழக்குப் பெயர் | : | செவ்வலரி |
தாவரப் பெயர் | : | நீரியம் இன்டிகம் (Nerium indicum,Mill.) |
கணவிரம்–செவ்வலரி இலக்கியம்
அலரும் மலருக்குக் காரணப் பொதுப் பெயராக ‘அலரி’ என்ற ஒரு பெயர் உண்டு. அலரிப்பூ அடுக்காகவும் தொகுப்பாகவும் அலர்வது. சங்க இலக்கியத்தில் இதனைக் கணவிரம் என்பர். நக்கீரர் இதனைக் கணவீரம் என்று கூறுவர்.
“பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி”
—திருமுரு. 236-237
கணவீரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் செவ்வலரி என்று உரை வகுத்தார். பரிபாடல் இதனைக் கணவிரி என்று பகரும்.
“சினைவளர் வேங்கை கணவிரி காந்தள்”
—பரிபா. 11:20