பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

சங்க இலக்கியத்

பரிமேலழகரும் கணவிரி என்பதற்குச் ‘செவ்வலரி’ என்றே உரை கூறுவர். அலரிப்பூ அடுக்காகவும், தொகுப்பாகவும் விரிவது ஆகும். கணம் என்றால் தொகுப்பு அல்லது அடுக்கு என்று பொருள்படும். ஆகவே, கணவிரி என்னும் பெயர் அலரிப் பூவுக்கு ஒக்கும். கணவிரத்தையே கணவிரமென்றனர். நிகண்டுகள், இதற்கு அடுக்கு என்ற பெயரையும் சூட்டுகின்றன.

செவ்வலரி என்பதே இதன் நிறத்தைக் கூறுகின்றது. இதில் வெள்ளை அலரியும், மஞ்சள் அலரியும் உண்டு. பாலை நிலப் பாதையில் வழிச் செல்வோரைக் கொள்ளையர், தம் கணையால் அடித்து வீழ்த்துவர். வீழ்ந்தவர் குருதி கொப்பளிப்பக் கிடந்ததை மாமூலனார் பாடுகின்றார். இவரது நிலை சூடிக் கழித்த கணவீர மாலையை ஒத்துள்ளதென்பர்.

“நிணவரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
 கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
 புண்ணுமிழ்க் குருதி பரிப்பக் கிடந்தோர் ”

-அகநா. 31 :8- 10


கணவிரப் பூமாலை புண்ணுமிழ்க் குருதி போன்றது. மணிமேகலையில் சுதமதி என்பாளது தந்தையைப் புனிற்று ஆ ஒன்று முட்டிக் குடரைச் சரித்தது. குருதி கொட்டும் குடரைக் கையில் ஏந்தி நின்ற அவரைச் சாத்தனார்,

“கணவிர மாலை கைக் கொண்டன்ன
 நிணம்நீடு பெருங்குடன் கையத்து ஏந்தி”
[1]

இவ்வாறு குருதி தோய்ந்த குடருக்குக் கணவிரமாலை உவமையாயிற்று. அதனால், இதனை ‘நிணக்குடர் மலர்’ என்றார் கோவை. இளஞ்சேரனார்.

முருகனுக்கு அமைக்கும் களவழிபாட்டில், செவ்வலரி மாலையை ஒத்த அளவில் அறுத்துக் கள ஒப்பனையாகத் தொங்க விடப்பட்டிருந்ததை நக்கீரர் கூறுவர்.

“பெருந்தண் கணவீர நறுந்தன் மாலை
 துணையற அறுத்துத் தூங்க நாற்றி”

-திருமுரு. 236ー237  1. மணி. 5 : 48–49